Last Updated:
நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 66 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாவே அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் பரபரப்பான சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.
முதல் போட்டி ராவில் முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி புலவாயோ நகரில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கினர்.
ஜிம்பாப்வே அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் ஆப்கன் பேட்ஸ்மேன்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 44.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் ஜிம்பாவே அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
73.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸ் உடன் ஒப்பிடும்போது இந்த ஸ்கோர் ஆப்கானிஸ்தானை விட 86 ரன்கள் அதிகமாகும். அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கன் அணிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ரஹ்மத் ஷா மற்றும் இஸ்மத் ஆலம் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை செய்தனர்.
ரஹ்மத் ஷா 139 ரன்களும், இஸ்மத் ஆலம் 101 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்றவர்கள் குறைவான ஸ்கோர்களில் வெளியேற இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கன் அணி 363 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து ஜிம்பாப்வே வெற்றி பெற 248 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 66 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாவே அணி 205 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் பரபரப்பான சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.
2 விக்கெட் கைவசம் உள்ள நிலையில் கூடுதலாக 73 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் களமிறங்கிய ஜிம்பாப்வே வீரர்கள் ஒரு ரன் கூட எடுக்காமல் 2 விக்கெட் களையும் பறிகொடுத்தனர். இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மட்டும் ஆப்கன் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் சிறப்பாக பந்து வீசி 11 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆப்கன் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
January 06, 2025 7:15 PM IST