அமெரிக்கா – கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் வீடுகள் கருகி நாசமடைந்துள்ளதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் இருந்து 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியான தகவல்களின் அடிப்படையில், மிக மோசமான சூழலை அப்பகுதி எதிர்கொண்டு வருவதாகவே கூறப்படுகிறது.
கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டயர்) நிலப்பரப்பு தீயினால் எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து வீசும் பலத்த காற்றினால் தீ பரவி வருவதால் ஆபத்து அதிகரித்திருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடும் பனிப்புயல் காரணமாக மேரிலாந்து, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, கன்சாஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சாஸ் ஆகிய ஏழு மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.