Last Updated:
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஸ்குவிட் கேமில் காட்டியிருக்கும் அமைப்பை போல் உண்மையாகவே 1970 மற்றும் 80களில் நடந்ததாக பங்களா ஒன்றை வீடியோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
நெட்ஃபிளிக்ஸின் பிரபலமான வெப் சீரீஸ்களில் ஸ்குவிட் கேம் முக்கியமான ஒன்று. அதிக பார்வையாளர்களை கடந்த இந்த கொரியன் வெப் சீரீஸ் உலகம் முழுவதிலும் பாராட்டுக்களை பெற்றது. பணத்தை மையமாக வைத்து கொடூரமான விளையாட்டுகள் மூலம் மரண பயத்தை காட்டும் தொடர்.
குறிப்பாக கடன் வாங்கி கஷ்டப்படும் நபர்களை குறி வைத்து அவர்களுக்கு பண ஆசையை காட்டி இந்த விளையாட்டிற்குள் கொண்டு வருவார்கள். பின் அவர்களை ஓரிடத்துஇல் வைத்து சில விளையாட்டுகளை விளையாட வைப்பார்கள். தோற்பவர்களுக்கு மரணம். ஜெயிப்போருக்கு பணம் என்பதுதான் இந்த கதையின் அம்சம். இதன் முதல் சீசன் 2001 ஆம் ஆண்டு வெளியானது. இது சூப்பர் த்ரில்லர் படமாக இருந்தாலும் சமூகத்தின் வறுமையை, ஏழ்மையை சுட்டிக்காட்டும் தொடராக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகி மீண்டும் பார்வையாளர்களை மிரட்டி வருகிறது.
இந்நிலையில் இந்த ஸ்குவிட் கேம் தொடர் உண்மையான சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது என்கிற செய்தி பரவி வருகிறது. அதாவது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஸ்குவிட் கேமில் காட்டியிருக்கும் அமைப்பை போல் உண்மையாகவே 1970 மற்றும் 80களில் நடந்ததாக பங்களா ஒன்றை வீடியோ எடுத்து வைரலாக்கி வருகின்றனர். அது உண்மையான தகவல்தானா..? அலசுவோம்..!
1970 மற்றும் 1980 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் சில நகரங்களில் internment camp என்று சொல்லப்படும் சித்திரவதை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த முகாமை Brother’s Home என்று அழைத்துள்ளனர். அங்கு அவர்களை சிறைக் கைதிகளை போல் அடைத்து எந்தவித சலுகைகளும் இன்றி வைத்துள்ளது. அதில் ஆயிரக்கணக்கான மக்களை ஒரே இடத்தில் குவித்துள்ளது. அவர்களை ‘Korea’s Auschwitz’ என்று அழைத்துள்ளனர். அவர்களை கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போரில் நாஜீக்களை அடைத்து சித்திரவதை செய்ததை போல் செய்துள்ளனர்.
இந்த முகாம் 1960களில் ’purifying the streets’ என்கிற பெயரில் வறுமை சமூகத்தை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரிய அரசு vagrant patrol teams என்னும் குழுவை அமைக்கிறது. இதன் மூலம் வறுமையின் பிடியில் இருக்கும் மக்கள், வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசிக்கும் மக்கள், குழந்தைகள், போராட்டக்காரர்கள், அரசின் திட்டங்களை எதிர்ப்போர், வேலை இல்லாதோர் ஆகியோரை அடையாளம் காண்கிறது.
பின் அவர்களை வலுக்கட்டாயமாக கடத்தி குழுக்களாக தென் கொரியாவின் பூசான் தீவில் முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளனர். தொடரில் காண்பிப்பதுபோல் இவர்களுக்கும் யூனிஃபார்ம்கள் கொடுத்துள்ளனர். இவர்களை வைத்து சம்பளமே இல்லாமல் வேலை வாங்குவது, அடிப்பது, சித்திரவதை செய்வது என அவர்களை அரக்கர்களைபோல் வழி நடத்தியுள்ளது. இந்த முகாமின் நோக்கம் அவர்களுக்கு நன்நடத்தைகளை கற்பித்து சமூகத்தில் வாழ தகுதியானவர்களாக மாற்றி விடுவிக்கப்படும் என்பதே. அதற்காக சில டாஸ்குகள் கொடுக்கும். அந்த டாஸ்குகளை சரியாக செய்யாதவர்களுக்கு தண்டனை வழங்கும். அந்த தண்டனைக்கு பெயர்தான் ’கேம்ஸ்’ என்று கூறியுள்ளனர். இந்த விளையாட்டில் பலர் இறந்துள்ளனர். பின் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி காணாமல் போனவர்களில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளதாக அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலரின் தகவல்கள் இன்னும் கிடைக்கப்படவில்லை. இந்த முகாமில் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்துள்ளன.
அப்படி அந்த முகாமிலிருந்து மீட்கப்பட்ட நபர் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார் அதில் “ நானும் என் தங்கையும் 1984 – இல் கடத்தப்பட்டோம். இருவரும் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த சமயத்தில் சிலர் வலுக்கட்டாயமாக ஒரு பேருந்தில் தூக்கிச்சென்றனர். அவர்கள் நாங்கள் கத்தியதால் அடித்தார்கள். பின் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தனியார் இடத்தில் அடைக்கப்பட்டோம்” என்று கூறியுள்ளார்.
Also Read | OTT Spot | திக் திக் நிமிடங்கள்… மரண விளையாட்டு… பதைபதைக்கும் காட்சிகள்.. எப்படியிருக்கிறது ஸ்குவிட் கேம் 2?
ஸ்குவிட் கேமின் உண்மையான சம்பவம் குறித்து இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் தொடரின் எந்த பகுதியிலும் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஆனால் சாங்யாங் மோட்டார் பணிநீக்கங்கள் பற்றி பேசியிருப்பார். 2009 ஆம் ஆண்டு தென் கொரியாவின் ஆட்டோ மொபைல் நிறுவனமான சாங்யாங் மோட்டார் 2000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் பெருமளவில் மக்கள் திரண்டு பணி நீக்கத்தை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இது மிகப்பெரிய விவாதத்திற்கு உள்ளானது. பலர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஸ்குவிட் கேம் வெப் சீரீஸ் குறித்த ஒரு பேட்டியில் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் பேசுகையில் “ SsangYong மோட்டார் பணிநீக்கங்கள் பற்றிய குறிப்பு மூலம், இன்று நாம் வாழும் உலகில் எந்த ஒரு சாதாரண நடுத்தர வர்க்க நபரும் ஒரே இரவில் பொருளாதார ஏணியின் அடிமட்டத்திற்கு விழலாம் என்பதைக் காட்ட விரும்பினேன். அதுதான் இந்த தொடரின் சாராம்சம்” என்று கூறியுள்ளார்.
January 08, 2025 8:40 PM IST