Last Updated:

Los Angeles wildfires | அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரை அச்சுறுத்தி வரும் தீவிபத்து, தொடர்ந்து பரவி ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Los Angeles wildfires

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது உலகத் திரைப்படத் தலைநகரமான ஹாலிவுட் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரம். காய்ச்சிய இரும்புக் கம்பி போல நகரமே செந்நிறத்தில் தோற்றம் அளித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் கடுமையான கோடை வாட்டி வருவதாலும் மழை அருகிப் போனதாலும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளும், வனப்பகுதிகளும் காய்ந்து கிடந்தன. இது போதாதா காத்துக் கிடந்த தீ அரக்கனுக்கு…. உலகப் பெரு நகரங்களுள் ஒன்றான லாஸ் ஏஞ்சலீஸையே பஸ்பமாக்கிவிடும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு மேலாக கொழுந்து விட்டு எரியும் தீயின் நாக்கு, பலத்த காற்றை துணையாக்கிக் கொண்டு 45 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவி தனது தாக்குதல் எல்லையை அதிகரித்தபடி உள்ளது. இதுவரை 18 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான மரம், செடி, கொடிகளை கருகச் செய்துள்ளது இந்தப் பெரும் தீவிபத்து.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களை சாய்த்துவிட்டதுடன், 5 உயிர்களையும் பறித்துள்ளது. தீயின் கோரத்தாண்டவத்தில் இருந்து தப்ப ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அங்கே இங்கே என தன் கோர நாக்கை சுழற்றி வந்த தீ அரக்கன், நேற்று மாலை முதல் ஹாலிவுட் அமைந்துள்ள மலைப்பகுதியை ஏறத் தொடங்கியதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹாலிவுட் ஸ்டூடியோ பகுதியில் 60 ஏக்கர் பரப்பை தீ தின்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | “இந்த முறை வேறு தொகுதி..” – உதயநிதி தொகுதி மாறுகிறாரா? 2026 தேர்தல் குறித்து கொடுத்த ஹின்ட்!

அமெரிக்காவின் மிகப்பெரிய கவுன்ட்டியான லாஸ் ஏஞ்சலீஸில் தீவிபத்து காரணமாக மூன்றரை லட்சம் மக்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், லாஸ் ஏஞ்சலீஸ் நகர வரலாற்றில் இது மிகப் பெரிய பேரிடராக உருவெடுத்துள்ளது. சர்வ வல்லமை படைத்த அமெரிக்கா இயற்கையின் தாண்டவத்தைக் கண்டு திகைத்துப் போய் நிற்கிறது.



Source link