Last Updated:
LIC’s Bhima Sakhi Yojana | எல்ஐசி அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பீமா சாகி ஏஜென்ட்களை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளது. இத்திட்டத்தில் சேர 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
எல்ஐசி பீமா சகி யோஜனா திட்டம் மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) ஆகியவை இணைந்து சில நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் சேருபவர்கள் எல்ஐசி-ல் ஏஜென்ட்களாக பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். இத்திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், நிதிப் பாதுகாப்பையும் அளித்துள்ளது.
இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி ஹரியானா மாநிலம் பானிபட்டில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில் சேருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள், இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்துள்ளனர்.
திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், பீமா சகி திட்டத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 52,511ஐ எட்டியுள்ளதாக எல்ஐசி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களில் 27,695 பேர் பாலிசிகள் விற்பனை செய்ய நியமனக் கடிதங்கள் பெற்றுள்ளனர். மேலும், 14,583 பேர் பாலிசிகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
எல்.ஐ.சி.யின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த் மொஹந்தி, ஒரு வருடத்திற்குள் நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் ஒரு பீமா சகியையாவது பணியமர்த்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மேலும், எல்ஐசியானது பெண்களுக்குத் தேவையான திறன் பயற்சி வழங்கி தயார்படுத்துகிறது மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
எல்ஐசி அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான பீமா சகி ஏஜென்ட்களை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளது. இத்திட்டத்தில் சேர 18 முதல் 70 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பீமா சகி திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது தவிர, போனஸ் கமிஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Post Office : போஸ்ட் ஆபிஸில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
உதவித் தொகையைப் பொறுத்தவரையில், எல்ஐசியின் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு முதல் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் மூன்றாம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர, பெண் ஏஜென்ட்கள் தங்கள் காப்பீட்டு பாலிசிகளின் அடிப்படையில் கமிஷனைப் பெறலாம்.
January 12, 2025 9:08 AM IST