விஷால், சந்தானம், சோனு சூட், அஞ்சலி, வரலட்சுமி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு உருவான மதகஜராஜா, சில காரணங்களால் 12 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி உள்ளது.
நான்கு நண்பர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய ஆசிரியரின் மகள் திருமண விழாவுக்கு வருகின்றனர். அங்கு தன்னுடைய பள்ளி நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளை தெரிந்துகொண்டு, அவற்றை நாயகன் தீர்த்து வைக்கிறார். இந்த சிம்பிளான கதையை அதகளமான காமெடி ஸ்டைலில் இரண்டரை மணி நேர திரைப்படமாக எடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் சுந்தர் சி.
இதையும் வாசிக்க: OTT Spot | ஃபீல்குட் + த்ரில்லர்..டாப் IMDb ரேட்டிங்.. பொங்கல் விடுமுறையில் கண்டுகளிக்க 5 ஓடிடி படங்கள்!
திரைப்படத்தில் அதிக மெனக்கெடல்கள் இருக்காது. புதிய விஷயங்கள் இருக்காது. கருத்துக்கள் இருக்காது. ஆனால், திரையரங்கில் சிரிப்பு சத்தமும், கைதட்டலும் காதை பிளக்கும். தனது இந்த கமர்ஷியல், காமெடி பார்முலாவை பக்காவாக பயன்படுத்தி மதகஜராஜாவையும் ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
அதுமட்டுமின்றி, விஷாலின் அதிரடி ஆக்ஷன், விஜய் ஆண்டனியின் அசத்தலான பாடல்கள், சின்ன சென்டிமென்ட் உள்ளிட்டவற்றை பக்காவாக திரைக்கதையில் இணைத்து அசத்தலான சிக்ஸர் அடிக்கிறார் இயக்குனர்.
மதகஜராஜா திரைப்படத்தில் சந்தானம் அடிக்கும் காமெடிகளுக்கு திரையரங்கில் அவ்வளவு வரவேற்பு. இந்த சந்தானத்தை, மிஸ் செய்து விட்டோமே என்று படம் முழுவதும் ரசிகர்களை நினைக்க வைத்துள்ளது அவரது கவுன்ட்டர்கள்.
தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை பாடல், பின்னணி இசை இரண்டிலும் விஜய் ஆண்டனி ஸ்கோர் செய்து இருக்கிறார். அதே போல் ரிச்சர்ட் என்.நாதனின் ஒளிப்பதிவு 12 ஆண்டுக்கு முன் எடுத்த படம் என்ற எண்ணத்தை எங்கேயும் ஏற்படுத்தவில்லை. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்திற்கு தேவையான தங்கள் பங்களிப்பை நிறைவாகக் கொடுத்துள்ளனர்.
படத்தில் குறைகள் இல்லையா என்று கேட்டால்? இருக்கிறது. ஆனால் சுந்தர்.சி படம் என்ற எண்ணத்துடன் செல்வோருக்கு நிச்சயம் ஏமாற்றம் இருக்காது என்றே சொல்லலாம். மொத்தத்தில் மதகஜராஜா, Review-வுக்கான திரைப்படம் அல்ல, Revenue-வுக்கான படம்.
January 12, 2025 1:49 PM IST