அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வருடத்திற்குள் 50,000, வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக நிலவிய வாகன இறக்குமதிக்கான தடையைத் தளர்த்தி அரசாங்கம் மீண்டும் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்குமான வரி சதவீதங்களை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானியை அரசாங்கம் கடந்த வாரம் வெளியிட்டது.
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாகன உற்பத்தி திகதியிலிருந்து 10 வருடங்களுக்கு குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்ட வாகனங்களுக்காக 200 சதவீதம் முதல் 300 சதவீதம் வரையில் வரி விதிக்கப்படவுள்ளது.
அதன்படி, வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 20 சதவீதம் வரையில் அதிகரிக்கக் கூடும் எனவும், இயந்திர திறன் 660 சிசி பிரிவில் உள்ள வாகனங்களான வெகன்ஆர், சுசுகி எல்டோ உள்ளிட்ட மகிழுந்துகளுக்கு நிலவிய வரி 16 இலட்சம் என்பதுடன், புதிய வரி கொள்கைக்கு அமைய அந்த வரி 18 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.
டொயோட்டா விட்ஸ் மற்றும் டொயோட்டா கொரோலா உள்ளிட்ட ஆயிரம் சிசி இயந்திர திறன் கொண்ட மகிழுந்துக்கான வரி சுமார் 20 இலட்சம் ரூபாவில் காணப்பட்டதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய புதிய வரி கொள்கைக்கு அமைய, குறித்த வாகனங்களுக்கான வரி சுமார் 24 இலட்சம் ரூபாய் அதிகரிக்கும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், டொயோட்டா அக்வா, டொயோட்டா ஆக்சியோ மற்றும் டொயோட்டா பிரீமியோ உள்ளிட்ட ஆயிரத்து 500 சிசி இயந்திர திறன் கொண்ட மகிழுந்துகளுக்கான வரி சுமார் 57 இலட்சத்திலிருந்து, 66 இலட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதம் வரை அதிகரிக்ககூடும் என தெரிவித்துள்ளார்.