மனைவியை பிரியும் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளரும் ‛ஆஸ்கர்’ விருது வென்ற இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியினர் தங்கள் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அறிவித்தனர். இதுசம்பந்தமாக ஏ.ஆர்.ரஹ்மான், தனது X தளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு பிரிவு தொடர்பாக பல்வேறு சமூக வலைதளங்களில், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூ டியூபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்ளுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
Amaran OTT Release Date | அமரன் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
இந்த அவதூறு வீடியோக்கள், கட்டுரைகளை உடனடியாக நீக்காவிட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.