ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 2 – 1 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், சிட்னி நகரில் 5-வது மற்றும் இறுதிப் போட்டி இன்று தொடங்கியது. தொடர் முழுவதும் மோசமாக விளையாடி வரும் கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதில் பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார்.
இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கே.எல்.ராகுல் 4 ரன்களிலும் வெளியேறினர். ரோஹித் சர்மாவுக்கு பதில் களம் இறங்கிய கில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் களத்தில் இருந்த விராட் கோலி 17 ரன்களில் வெளியேறினார். பந்த் 40 ரன்களில் வெளியேறிய நிலையில், நிதிஷ்குமார் ரெட்டி டக் அவுட் ஆனார்.
இறுதியில் கேப்டன் பும்ரா சற்று நேரம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை எந்தவித பதற்றமும் இல்லாமல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என விளாசி 22 ரன்கள் சேர்த்தார். இறுதியில் கம்மின்ஸ் பந்தில் பும்ரா விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Also Read | Rohit Sharma: ‘எங்கள் கேப்டன்’… ரோஹித் சர்மா பற்றி டாஸில் பும்ரா என்ன சொன்னார்?
இதன்பின் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு 19 வயது வீரர் சாம் கோன்ஸ்டாஸ், பும்ராவின் வீசிய முதல் பந்தை பவுண்டரி அடித்து தொடக்கம் கொடுத்தார். மறுபுறம் ஆரம்பம் முதலே விக்கெட் எடுக்கும் முனைப்பில் பும்ராவும் சிராஜும் தீவிரம் காட்டினர்.
இதில் பும்ரா தனது ஓவரில் கிட்டத்தட்ட 8 வீரர்களை 30 யார்டு சர்க்கிளில் நிறுத்தி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். அப்படி 3வது ஓவரின் கடைசி பந்தை பும்ரா வீசியபோது உஸ்மான் கவாஜா அவரை எதிர்கொண்டார். பும்ரா பந்துவீச தயாரானபோது கவாஜா தயாராகவில்லை.
இதனால் பும்ரா அவரிடம் தனது அதிருப்தியை தெரிவித்தபோது, எதிர்முனையில் இருந்த சாம் கோன்ஸ்டாஸ் பும்ராவை திட்டுவதுபோல் ஸ்லெட்ஜ் செய்தார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட நடுவர் தலையிட்டு சமாதானப்படுத்தினார்.
இதன்பின் பும்ரா பந்துவீச ஆஸி வீரர் கவாஜா அடித்த பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற கே.எல். ராகுலிடம் கேட்ச் ஆனது. கவாஜா விக்கெட்டை அடுத்து பும்ரா உட்பட மொத்த இந்திய வீரர்களும் சாம் கோன்ஸ்டாஸை சுத்துப் போட்டு அவரை கடுப்பேற்றி விக்கெட்டை கொண்டாடினர். இதனால், முதல் நாளின் கடைசி பந்தில் களத்தில் அனல் பறந்தது.
Fiery scenes in the final over at the SCG!
How’s that for a finish to Day One 👀#AUSvIND pic.twitter.com/BAAjrFKvnQ— cricket.com.au (@cricketcomau) January 3, 2025
சாம் கோன்ஸ்டாஸ் 4வது டெஸ்டில் தான் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார். முதல் போட்டியில் இருந்தே பும்ராவை அவர் ஸ்லெட்ஜ் செய்யும் விதமாக நடந்துகொண்டார். பின்னர் பும்ரா அவரின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். இது ஆரோக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
தொடர்ந்து விராட் கோலி, சாம் கோன்ஸ்டாஸை சீண்டினார். இதற்கு அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சாம் கோன்ஸ்டாஸ் மீண்டும் பும்ராவிடம் வம்பிழுக்க, தற்போது மொத்த இந்திய அணியும் சேர்ந்து சாம் கோன்ஸ்டாஸை கடுப்பேற்றியுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 03, 2025 1:31 PM IST