Last Updated:

Cinema | ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய மலையாள படத்துக்கு ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜித்து மாதவன் கதை எழுதுகிறார்.

News18

இரண்டு அட்டகாசமான வெற்றிப்படங்களின் இயக்குநர்கள் புதிய படத்துக்காக ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அறிவிப்பு தான் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மலையாளத்தில் 2024-ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் என்றால் அது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, மற்றொன்று ‘ஆவேஷம்’ இந்த இரண்டு படங்களின் இயக்குநர்களும் புதிய படம் ஒன்றுக்காக கூட்டணி அமைத்துள்ளனர்.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய மலையாள படத்துக்கு ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜித்து மாதவன் கதை எழுதுகிறார். இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.

படம் குறித்து கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா கூறுகையில், “இந்தப் படம் மூலம் நாங்கள் மலையாள திரையுலகில் களமிறங்குகிறோம். ரசிகர்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் பிரமாண்டம் மற்றும் சிறப்பான கதையம்சம் இந்தப் படத்தில் இருக்கும்” என்றார்.

இயக்குநர் சிதம்பரம் கூறுகையில், “கதைகளை சொல்லும் என் ஆசையை பகிர்ந்து கொள்ளும் குழுவுடன் பணியாற்ற இருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த கூட்டணியை நான் அதிகம் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

இதையும் வாசிக்க: Pushpa 2 | ‘பாகுபலி 2’ வசூலை முறியடித்த ‘புஷ்பா 2’ – வசூலில் மாஸ் காட்டும் அல்லு அர்ஜுன்

எழுத்தாளர் ஜித்து மாதவன் கூறும் போது, “இந்தக் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. தலைசிறந்த குழுவுடன் இணைந்து, சிறப்பான ஒன்றை உருவாக்குவோம் என்பதில் நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்” என்றார்.

கே.வி.என். நிறுவனம் கன்னட மொழியில் யாஷ் நடிக்கும் டாக்சிக், தமிழில் விஜய்யின் தளபதி 69, இந்தி மொழியில் பிரியதர்ஷன் இயக்கும் திரில்லர் படங்களுடன் தற்போது மலையாளத் துறையிலும் களமிறங்கியுள்ளனர்.



Source link