அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகப் பதவியேற்ற பின் உரையாற்றிய அதிபர் டிரம்ப், அமெரிக்கா இதுவரை இல்லாத வகையில் வளர்ந்ததாகவும், முன்னேற்றமடைந்ததாகவும் மாறும் என்று கூறினார். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற தான் கடவுளால் காப்பாற்றப்பட்டதாகக் கூறிய டிரம்ப், இதுவரை இல்லாத அளவில் வலுவானதாக அமெரிக்கா மாறும் என்றும், பொற்காலம் தொடங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் நடந்த இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அதிபராகப் பொறுப்பேற்ற சில மணிநேரத்தில், பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
அவற்றில் ஒன்று, உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார். இதேபோல் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திட்டுள்ளார்.
ஜோ பைடன் வெற்றிபெற்றதை எதிர்த்து வாஷிங்டன் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் கோப்பிலும் கையெழுத்திட்டார். டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டன்னில் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விடுவிப்பதாக கொடுத்த வாக்குறுதியை தனது முதல் கையெழுத்து மூலம் நிறைவேற்றி இருக்கிறார்.
அமெரிக்காவில் பேச்சு சுதந்திரத்தை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் பேச்சு சுதந்திரம் மீது அரசாங்கம் தணிக்கை விதிக்காது என்கிற உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
பைடன் ஆட்சியில் தடைவிதிக்கப்பட்ட டிக்டாக் 90 நாட்களில் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் உத்தரவு கோப்பிலும் கையெழுத்திட்டார்.
இதுதவிர, மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா என்று அழைக்கப்படும் உத்தரவு, அமெரிக்காவில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் உத்தரவு ஆகியவற்றிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்கா அல்லாத பிற நாட்டவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைப்பது தடை செய்யும் சட்ட உத்தரவிலும் கையெழுத்திட்டார். அமெரிக்க சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா – மெக்சிகோ பார்டரில் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் கோப்பிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும், இந்த உத்தரவின் மூலம் எல்லையில் ஆயுதமேந்திய ராணுவ வீரர்களை நிலைநிறுத்தவும், மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாகப் புகலிடம் தேடி வருபவர்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.
அதேபோல், பணவீக்கம் மற்றும் எரிசக்தி விலைகளைக் கட்டுக்குள் வைக்கும் வகையில், தேசிய எரிசக்தி அவசரநிலை பிரகடனம், மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு ரத்து, வெளிநாட்டு பொருட்களுக்கு வரி உள்ளிட்ட பல கோப்புகளிலும் முதல் நாளிலேயே கையெழுத்திட்டார்.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே அதிபர் ஆன முதல் நாளில் இந்த கோப்புகளில் கையெழுத்திடுவேன் என்று உறுதியளித்து இருந்தார். அதன்படி, தற்போது முதல் நாளிலேயே கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக, கோப்புகளில் கையெழுத்திட்ட பயன்படுத்திய பேனாக்களை கூட்டத்தினர் மத்தியில் டிரம்ப் வீசினார். அதனை எடுத்துக் கொண்ட மக்கள் பேனாவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 21, 2025 12:03 PM IST
Donald Trump | அமெரிக்க அதிபராக முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்ட கோப்புகள்.. 8 மணிநேரத்தில் இத்தனையா?