நியூயார்க் ரியல் எஸ்டேட் அதிபர் பிரெட் டிரம்பின் நான்காவது மகனாக பிறந்த டொனால்டு டிரம்ப், பள்ளியிலேயே படுசுட்டியானவர். தனது 13 வயதில், பள்ளியில் தவறான நடத்தைகளில் ஈடுபட்டதால், ராணுவ அகாடமிக்கு டிரம்ப் அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டிரம்ப், தனது தந்தையின் தொழிலை கவனித்துக் கொள்ளும் பொறுப்பிற்கு தள்ளப்பட்டார்.

அதாவது, அவரது சகோதரர் விமானியாக முடிவு செய்ததால், தந்தையின் தொழில் வாரிசாக டிரம்ப் மாறினார். ஆனால், விமானியான அவரது சகோதரர், குடிப்பழக்கத்தால் 43 வயதில் உயிரிழந்ததால், டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் மது மற்றும் சிகரெட்டை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தந்தையின் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவரிடமே 1 மில்லியன் டாலர் கடனாக பெற்று ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார் டிரம்ப். அதில், சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட அவர், நியூயார்க் நகரத்தில் தனது தந்தையின் பரந்த அளவிலான குடியிருப்பு மேம்பாட்டுப் பணிகளையும் கவனித்துக் கொண்டார்.

1971ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர், அதை டிரம்ப் அமைப்பு என பெயர் மாற்றம் செய்தார்.

1999 ஆம் ஆண்டு அவரது தந்தை காலமான நிலையில், முழு வீச்சில் வணிகத்தைக் கவனித்த டிரம்ப், புரூக்ளின் மற்றும் குயின்ஸில் இருந்து முன்னேறி, செல்வாக்கு மிக்க மன்ஹாட்டன் பகுதிக்கும் குடியிருப்புத் திட்டங்களை விரிவுபடுத்தினார்.

மன்ஹாட்டனில் புகழ்பெற்ற 5 ஆவது அவென்யூ, டிரம்ப் டவர் என மாறியது. டிரம்பின் மிகப் பிரபலமான சொத்தாக அறியப்படும் இந்த இல்லத்தில் தான், அவர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

“டிரம்ப்” என்ற பிராண்ட், குடியிருப்புகள் மட்டுமின்றி, கேசினோக்கள், கோல்ஃப் மைதானங்கள், ஹோட்டல்கள் எனப் பெருகியதுடன், இந்தியா, துருக்கி, பிலிப்பைன்ஸ் வரையிலும் வணிகம் வளர்ந்தது.

வணிகத்தில் கோலோச்சிய டிரம்ப், பொழுதுபோக்குத் துறையிலும் கால் பதித்து வெற்றிக் கண்டார். மிஸ் யுனிவர்ஸ், மிஸ் யுஎஸ்ஏ, மிஸ் டீன் யுஎஸ்ஏ உள்ளிட்ட அழகிப் போட்டிகளை நடத்திய டிரம்ப், என்பிசி சேனலில், “தி அப்ரண்டிஸ்” (THE APPRENTICE) என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்தார்.

14 சீசன்களுக்கு மேல் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், அவரது வணிக சாம்ராஜ்யத்தில் நிர்வாக ஒப்பந்தத்திற்காக ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சிகளில், “You Are Fired” என்று டிரம்ப் பயன்படுத்திய வசனம், அவரை அமெரிக்காவின் பட்டித்தொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது என்றே கூறலாம்.

பல புத்தகங்களை எழுதியுள்ள டிரம்ப், திரைப்படங்கள் மற்றும் WWE நிகழ்ச்சிகளிலும் தோன்றி உலக அளவில் பிரபலமானார். வெளித்தோற்றத்திற்கு டிரம்ப் வெற்றிகரமான தொழிலதிபராகத் தோன்றினாலும், அவரது நிகர சொத்து மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

அதாவது, 6 முறை வணிக திவால் நோட்டீஸ்களை டிரம்ப் தாக்கல் செய்ததாகவும், அவர் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, டிரம்பின் அரசியல் பார்வை வயதிற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வந்தது. அதாவது, அரசியல் என்பது மிகவும் சராசரியான வாழ்க்கை, திறன்வாய்ந்த மனிதர்கள் வணிக உலகத்தைத் தான் தேர்வு செய்வார்கள் என்று தனது 34 வயதில் டிரம்ப் கூறினார்.

ஆனால், 2000 ஆம் ஆண்டில் அதாவது தனது 54 ஆவது வயதில், குடியரசுக் கட்சியில் நுழைய டிரம்ப் எத்தனித்தார். பின்னர், ரிஃபார்ம் கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட நினைத்த டிரம்ப், மீண்டும் 2012-ல் குடியரசுக் கட்சியின் பக்கமே சாய்ந்தார்.

பராக் ஒபாமாவின் பிறப்பிடம் குறித்த சர்ச்சையை வெளிப்படையாக ஆதரித்த டிரம்ப், அரசியலில் ஆழமாகக் கால் பதிக்கத் தொடங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, 2016 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களம் இறங்கிய டிரம்ப், அமெரிக்கர்களின் கனவுகளைப் பெரிதாகவும் சிறப்பாகவும் கொண்டு வருவேன் என்று உறுதியளித்தார்.

ஆவேசப் பேச்சு, விவாத மேடைகளில் ஆதிக்கம், சர்ச்சையான கொள்கைகளால், டிரம்பிற்கு அபிமான ரசிகர்கள் மற்றும் தீவிர எதிர்ப்பாளர்கள் சம அளவில் உருவாகினர்.

2016 அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளில் பின் தங்கியிருந்த டிரம்ப், அதனைப் பொய்யாக்கி அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக வெற்றிக் கண்டார்.

Also Read | ‘இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்’ – வெற்றி உரையில் டொனால்ட் டிரம்ப் பெருமிதம்!

அமெரிக்க அதிபராக டிரம்பின் செயல்பாடுகளிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை என்றே கூறலாம்.

வெளிநாட்டுத் தலைவர்களுடன் நேரடி மோதல், குடியேற்றக் கட்டுப்பாடு, வரி விதிப்புகளில் மாற்றம், கொரோனா தடுப்பு மருந்து குறித்த சர்ச்சைப் பேச்சு என டிரம்பின் சர்க்கார் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.

அதன் விளைவாக, கடந்த அமெரிக்கத் தேர்தலில், ஜோ பைடனிடம் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு நன்கொடையாளர்கள் மற்றும் குடியரசுக் கட்சியினரே அதிருப்தி தெரிவித்த நிலையில், தனது குடும்பத்துடன் டிரம்ப் ஃபுளோரிடாவிற்குச் சென்றார்.

அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக பலர் கருதிய நிலையில், தனக்கு ஆதரவாக இருந்த ஒரு சிலரால், குடியரசுக் கட்சியில் தனது செல்வாக்கைத் தக்க வைத்தார் டிரம்ப்.

2022 ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலிலும், குடியரசுக் கட்சியின் மோசமான தோல்விக்கு அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டாலும், அதிபருக்கான போட்டியில் டிரம்பின் கை ஓங்கியது.

இதனிடையே நான்கு கிரிமினல் வழக்குகளில் 91 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட டிரம்ப், வழக்குகளைத் தாமதப்படுத்தும் உத்தியைக் கையாண்டார்.



Source link