அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2-ஆவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றிக்கு பின்னால் உள்ள முக்கிய நபராக பார்க்கப்படுபவர் உலகப் பணக்காரர் எலான் மஸ்க்.
டொனால்ட் ட்ரம்பிற்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்த எலான் மஸ்க், பிரச்சாரத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்ததாக கூறப்பட்டது. இதற்கெல்லாம் நன்றிக்கடனாக, புதிதாக அமைய உள்ள தனது அரசின் செயல்திறன் துறையின் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார் ட்ரம்ப்.
இது ஒருபுறம் இருக்க, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கியது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்பின் தொழில் ஆதரவு கொள்கைகளின் மீதான எதிர்பார்ப்புகள் காரணமாகவும், அது நிச்சயம் எலான் மஸ்கிற்கு ஆதரவாக இருக்கும் என்ற கணிப்பு காரணமாகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது முதலீடுகள் குவியத் தொடங்கி உள்ளன.
எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI இல் 60 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அந்த நிறுவனத்தின் மதிப்பு தற்போது 4 லட்சத்து 22 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
மேலும், தனது தனியார் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தில் எலான் மஸ்க் 42 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார். அதன்மூலம், 7 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து அவர் வசம் உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மதிப்பு விரைவில் 21 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மஸ்க்கின் சொத்து மதிப்பு மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான நவம்பர் 5-ஆம் தேதிக்கு பிறகு, எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் மதிப்பு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 22-ஆம் தேதி மட்டும் டெஸ்லா பங்குகள் மதிப்பு 3.8 சதவீதம் உயர்ந்து, மூன்றரை ஆண்டுகளில் இல்லாத வகையில் 352.56 டாலர் என்ற விலையில் முடிந்தது. இதனால், 12 சதவீத பங்கு வைத்துள்ள எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 60 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மஸ்கின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 29 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அவர் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்மூலம், உலக அளவில் 29 லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியலில், 20 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் Oracle இணை நிறுவனர் larry ellison இரண்டாம் இடமும், 18 லட்சம் கோடி ரூபாய் சொத்துடன் அமேசான் நிறுவன சிஇஓ Jeff Bezos மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
November 24, 2024 8:49 PM IST
Elon Musk | ட்ரம்பிற்கு ஆதரவு…சர்ரென உயர்ந்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! இத்தனை லட்சம் கோடியா?