Last Updated:

Game Changer | பல கெட்டப்புகளில் வந்து செல்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாகவும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவும், சாமானியராகவும் அவரின் தோற்றங்கள் படத்தில் இருக்கும் ட்விஸ்டை உறுதி செய்கின்றன.

News18

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியின் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், டிரெய்லர் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. டிரெய்லரில் இடம்பெற்ற முக்கிய காட்சிகளின் டிகோடிங் குறித்து இங்கே பார்ப்போம்.

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கதையாக சொல்லப்படுவது: ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு நகரத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கிறார் ராம் சரண். பதவியில் அமர்ந்த பிறகு தான் அதில் உள்ள சிக்கல்கள் அவருக்குப் புரிகிறது. இதனால் அரசு நிர்வாகத்தில் வேரூன்றியிருக்கும் ஊழலையும், முறைகேடுகளையும், திறமையின்மையையும், களைய போராடுகிறார். இதற்கு எதிராக குரல் கொடுக்கும் அவர், மாற்றங்களைக் கொண்டு வர முயலும்போது, மாநில முதல்வருடன் மோதல் வெடிக்கிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கதை எனக் கூறப்படுகிறது.

இதனை டிரெய்லரின் காட்சிகள் கிட்டத்தட்ட உறுதி செய்கின்றன. ஷங்கரின் படங்களில் பெரும்பாலும், ஊழல் எதிர்ப்பும், அரசு எதிர்ப்பும் பிரதானமானவை. அதை மையப்படுத்தியே அவரது பெரும்பாலான படங்கள் இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் டிரெய்லரின் தொடக்கத்திலேயே, “வயிறு முட்ட 10 கவளம் சாப்பிடும் யானை, ஒரே ஒரு கவளத்த வேண்டாம்னு விட்டுட்டா, அதுக்கு பெருசா எந்த நஷ்டமும் வராது.

ஆனா அது லட்சக்கணக்கான எறும்புகளுக்கு ஆகாரம். நான் உங்க கிட்ட கேக்குறது எந்த ஒரு கவளம் தான்” என்கிறார் ராம் சரண். அவரின் இந்த வசனம் ஊழல் எதிர்ப்பைப் பதிவு செய்கிறது. ரேஷன் கடைகளில் அரிசி பதுக்கல், முறைகேடுகள் குறித்த காட்சிகளும், அரசு அதிகாரியான அவரின் சீர்திருத்த நடவடிக்கைகளையும் காட்சிகளில் காண முடிகிறது. ‘சிவாஜி’ படத்தில் ஆடிட்டர்களை அமர வைத்து ரஜினி பேசுவது போல, இந்தப் படத்தில் ரவுடிகளுடன் ராம் சரண் பேசுவது போல ஒரு காட்சி டிரெய்லரில் வந்து செல்கிறது.

ஆனால், பல கெட்டப்புகளில் வந்து செல்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாகவும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவும், சாமானியராகவும் அவரின் தோற்றங்கள் படத்தில் இருக்கும் ட்விஸ்டை உறுதி செய்கின்றன. கியாரா அத்வானியைத் துரத்தித் துரத்திக் காதல், இடையில் கொஞ்சம் காமெடி கமர்ஷியல் கதைக்களத்துக்காக சேர்த்திருப்பதையும், பாடல்காட்சிகளின் பிரமாண்டம் ஷங்கர் ஸ்டைல். மெயின் கதைக்கு நடுவே அஞ்சலி வருவது, கிராமத்து சப்ஜெக்ட் இருப்பதையும் உறுதி செய்கிறது. அதாவது விவசாயிகள் பிரச்சினையையும் படம் பேசும் எனத் தெரிகிறது.

எல்லாவற்றையும் கடந்து ஆந்திர பிரதேச முதல்வராக எஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்கும் காட்சியில் டிரெய்லர் சூடுபிடிக்கிறது. ‘நீ 5 வருஷத்துக்கு தான் மினிஸ்டர் நான் ஆயுசுக்கும் கலெக்டர்’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. மொத்தத்தில் ஊழல் எதிர்ப்பு, பிரமாண்டம், அரசு நிர்வாக முறைகேடு உள்ளிட்ட விஷயங்களை ஷங்கர் தனது ஸ்டைலில் பேசியிருக்கிறார் என்பது டிரெய்லர் மூலம் உணர முடிகிறது.



Source link