நியூசிலாந்து அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி மோசமாக விளையாடியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் கடுமையான மழை பெய்தது. இதனால் 5 நாட்கள் கொண்ட போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. இன்று பெங்களூருவில் மழை குறைந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் காலை 8.45 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.

விளம்பரம்

இதற்கிடையே, ஆடும் லெவனில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஷுப்மன் கில்லுக்கு பதிலாக சர்ப்ராஸ் கானும், ஆகாஷ் தீப்புக்கு பதிலாக குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

முன்னதாக பேட்டிங் தேர்வு செய்ததற்கு காரணமாக கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளத்தை குறிப்பிட்டார். மழை அச்சுறுத்தல் மற்றும் மைதானம் ஈரப்பதத்துடன் இருக்கலாம் என்பதால், விரைவாக ரன்கள் குவிக்க ஏதுவாக முதலில் பேட்டிங் செய்வதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.

மழை காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதைப் போன்று இன்றும் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப ரோகித் சர்மாவும் பேட்டிங்கும் ரன்கள் குவிப்பை மையப்படுத்தியே இருந்தது.

விளம்பரம்

ஆனால், கள நிலவரம் வேறு மாதிரியாக இருந்தது. பெங்களூரு பிட்ச், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 10 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே 10 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

ரோகித், விராட் கோலி மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழக்க இந்திய அணி தடுமாறியது. அம்பயர்ஸ் காலில் தப்பித்த கேப்டன் ரோகித், அடுத்த சில நிமிடங்களிலேயே டிம் சௌதி பந்தில் போல்டு ஆகி ஆட்டமிழந்தார்.

இதன்பின் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் அணியை மீட்டெடுக்கப் போராடினாலும், அந்தப் போராட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஜெய்ஸ்வால் 13 ரன்களில் அவுட் ஆனார். மதிய உணவு இடைவேளை நேரத்தில் 34 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்தது. வீரர்கள் வருவதும், டக் அவுட் ஆவதுமாக இருந்தனர்.

விளம்பரம்

Also Read | 
வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும் 5 இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள்… தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அதிகபட்சமாக ரிஷப் பந்த் 20 ரன்கள் எடுத்து விக்கெட் ஆனார். விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய ஐந்து பேர் பூஜ்ஜியத்தில் அவுட் ஆகினர். இந்திய மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இத்தனை பேர் டக் அவுட் ஆனது இதுவே முதல் முறை.

இதன்பின் இறுதியாக 46 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகியது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 15 ரன்களே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டும், வில்லியம் ஓரூர்கே 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

விளம்பரம்

இந்திய அணியைப் பொறுத்தவரை 31.2 ஓவர்களில் மொத்தமே 4 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டது. ரிஷப் பந்த் இரண்டும், ஜெய்ஸ்வால், சிராஜ் தலா ஒரு பவுண்டரியும் அடித்தனர்.

.



Source link