Last Updated:
நிதீஷ் ரெட்டி 176 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்து தனது முதல் டெஸ்ட் சதத்தையும், அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரையும் பதிவு செய்தார்.
2024 – 25 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில், நிதீஷ் குமார் ரெட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சதம் அடித்து பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் 4-ஆவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய மூத்த வீரர்கள் ரன் எடுக்கத் தவறினாலும், நிதீஷ் குமார் ரெட்டி சதமடித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார்.
நிதீஷ் ரெட்டி 176 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்து தனது முதல் டெஸ்ட் சதத்தையும், அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரையும் பதிவு செய்தார். ஒரு கட்டத்தில் 221 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, நிதீஷ் ரெட்டி – வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்த்தது. இதனால் இந்திய அணி மூன்றாவது நாள் முடிவில் 358 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
இதையும் படிக்க: நிதீஷ் குமார் ரெட்டியின் சதம்..! கண்ணீர் விட்டு கொண்டாடிய தந்தை
இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டது மட்டுமல்லாமல், இந்த சதத்தின் மூலம் நிதீஷ் குமார் ரெட்டி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
நிதீஷ் குமார் ரெட்டி படைத்த சாதனைகள்:
1. 8 அல்லது அதற்குக் கீழ் வரிசையில் களமிறங்கி 105 ரன்கள் குவித்து, மெல்போர்ன் மைதானத்தில் 8 அல்லது அதற்குக் கீழ் வரிசையில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையை நிதீஷ் குமார் ரெட்டி படைத்துள்ளார். 122 ஆண்டுகளுக்கு முன்பு ரெஜினால்ட் அலெக்சாண்டர் டஃப் (104 ரன்கள்) படைத்த சாதனையை நிதீஷ் ரெட்டி முறியடித்தார்.
2. ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர் 8 அல்லது அதற்குக் கீழ் வரிசையில் களமிறங்கி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு அனில் கும்ப்ளே 2008 ஆம் ஆண்டு அடிலெய்டில் 87 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
3. இந்த சதத்தின் மூலம், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதம் அடித்த மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். மேலும் பாக்ஸிங் டே டெஸ்டில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் (21 வயது மற்றும் 216 நாட்கள்) என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்பு வீரேந்திர சேவாக் 25 வயதில் (2003) சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
December 28, 2024 7:51 PM IST