ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியும் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை சேர்த்துள்ளது.
பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும் அடுத்து வந்த தேவ்தத் படிக்கலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர். இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் விராட் கோலி 5 ரன்களில் நடையை கட்டினார். சற்றே நிதானமாக விளையாடிய வந்த கே.எல்.ராகுலும் 26 ரன்களில் அவுட் ஆனார். இளம் வீரர்கள் துருவ் ஜுரேல் 11 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 4 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். சற்று நேரம் நிலைத்து நின்று ஆடிய ரிஷப் பந்த், 37 ரன்களில் பேட் கம்மின்ஸ் இடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அறிமுக வீரராக களம் கண்ட நிதிஷ் ரெட்டி கடைசி விக்கெட்டாக 41 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 49 புள்ளி 4 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் கே.எல்.ராகுலின் விக்கெட், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல், மிட்சல் ஸ்டார்க்கின் பந்தை எதிர்கொண்ட போது, 3 ஆம் நடுவரின் தீர்ப்பு படி ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆனால், பந்து அவரது Bat-ல் படவில்லை என்றும், PAD-ல் பட்ட ஒலியை வைத்து தவறான தீர்ப்பு கொடுக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
Also Read :
ஐபிஎல் 2025 தேதிகள் அறிவிப்பு… ஏலம் தொடங்குவதற்கு முன் வெளியிட்டது பிசிசிஐ
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 8 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வெனி 10 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மூவரின் விக்கெட்டையும், கேப்டன் பும்ரா வீழ்த்தினார். இதையடுத்து வந்த டிராவிஸ் ஹெட்டை, அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்களை எடுத்திருந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை ஜஸ்புரித் பும்ரா வீழ்த்தினார்.
.