Last Updated:

மேலும், டிராவிட்க்கு பதிலாக பேட்டிங் ஜாம்பவான் VVS லட்சுமணை தலைமை பயிற்சியாளராக நியமிக்கவே BCCI விரும்பியது என பிசிசிஐ அதிகாரி கருத்து.

கவுதம் கம்பீர்

பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நீக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் சில வீரர்களுக்கும் இடையே மனக்கசப்பு நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அணியில் அவ்வப்போது நீக்கப்படும் மூத்த வீரர்கள், தங்களை ஏன் அணியில் இருந்து நீக்குகிறார்கள் என்பது குறித்து விளக்கம் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

PTI செய்தி நிறுவனத்தின் தகவல்படி, கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, அணி நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையேயான கருத்து பரிமாற்றம் மிகவும் குறைந்துள்ளது. ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பயிற்சியாளர்களாக இருந்தபோது இந்த நிலை இல்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஒரு காலத்தில் ரூ.13 கோடி சொத்து.. இன்று ஐபோன் பறிமுதல்.. இதுதான் வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலை!

இந்திய அணி தனது கடைசி ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. சிட்னியில் நடைபெற உள்ள ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணியின் ஆட்டம் மேம்படாவிட்டால், கம்பீரின் பதவி கூட பரிசீலிக்கப்படலாம் என BCCI வட்டாரங்களில் கூறப்படுகிறது. “இதற்கடுத்து இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் உள்ளன. அணியின் ஆட்டம் மேம்படாவிட்டால், கௌதம் கம்பீரின் பதவிக்கும் ஆபத்து வரலாம்” என்று மூத்த BCCI அதிகாரி ஒருவர் PTI நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும், டிராவிட்க்கு பதிலாக பேட்டிங் ஜாம்பவான் VVS லட்சுமண்னை தலைமை பயிற்சியாளராக நியமிக்கவே BCCI விரும்பியது என்றும், அவர் இல்லாததால் அதற்கு சமரசத்திற்காகவே கம்பீர் நியமிக்கப்பட்டார் என்றும் அந்த அதிகாரி கூறினார். மேலும் பிரபலமான சில வெளிநாட்டு பயிற்சியாளர்களும் அணியை வழிநடத்த விரும்பினார்கள். ஆனால் மூன்று வடிவ கிரிக்கெட்டுகளிலும் அவர்கள் பயிற்சி கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுடனான தொடர் முடிந்ததும், கேப்டன் ரோகித் சர்மாவும், தலைமை பயிற்சியாளராக இருக்கும் கம்பீரிடமும் பிசிசிஐ விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த வீரர்கள் இந்திய அணியில் சோபிக்காததால், விரைவில் ரோகித் சர்மாவும் கேப்டன்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா விளையாட வேண்டுமானால், 5-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். மேலும் அடுத்து நடக்கவிருக்கும் இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைய வேண்டும். கடும் நெருக்கடி இருப்பதால் 5-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லும் முனைப்புடன் களமிறங்கக்கூடும் என்பதால் போட்டி மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



Source link