வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை மண்ணின் மைந்தன் அஸ்வின் அபாரமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் அடித்திருந்த நிலையில், வங்கதேச அணி 149 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து வங்கதேசத்திற்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்தது. மூன்றாம் நாளில் பொறுப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் மற்றும் கில் இணை அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்வதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். இதன் மூலம் வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் ஆட்டம் இழக்காமல் 119 ரன்கள் எடுத்தார்.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாகின் ஹசன் 33 ரன்களும், ஷத்மன் இஸ்லாம் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3ஆம் நாள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணி சற்று நிதான தொடக்கம் கொடுத்தது. எனினும், கேப்டன் சாண்டோ – ஷகிப் இணையை பிரித்தார் அஸ்வின். ஷகிப் அல் ஹசன் 25 ரன்களில் விக்கெட்டாக, லிட்டன் தாஸை ஒரே ரன்னில் ஆட்டமிழக்க செய்தார் ஜடேஜா.
இதன்பின் டெயிலெண்டர்களை அஸ்வின், ஜடேஜா மாற்றி, மாற்றி விக்கெட் எடுக்க, வங்கதேச அணி 234 ரன்களுக்கு எல்லாம் ஆல் அவுட் ஆனது. 82 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ விக்கெட்டை ஜடேஜா காலி செய்தார்.
Also Read |
தோனி ஸ்டைலில் எதிரணிக்கு ஃபீல்ட் செட் செய்ய உதவிய ரிஷப் பந்த்… நடந்தது என்ன?
இதன்மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கிய காரணம் வகித்தார் சென்னை மண்ணின் மைந்தன் அஸ்வின். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சாதனை: வங்கதேச அணிக்கெதிரான வெற்றியின் மூலம் 92 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா தோல்விகளை விட வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தியா இதுவரை 580 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இன்றைய வெற்றியுடன் சேர்த்து 179 போட்டிகளில் 178 போட்டிகளில் தோல்வியும், 222 போட்டிகளில் டிராவிலும் முடிந்துள்ளது. ஒருபோட்டி டை ஆனது.
.