Last Updated:
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது.
இந்தியா வந்துள்ள ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் ரன் கணக்கை தொடங்காமலும், பென் டக்கெட் 4 ரன்களிலும் நடையை கட்டினர். அதனைத் தொடர்ந்து கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன.
அரைசதத்தை கடந்த பட்லர் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 132 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் டக்அவுட்டாக, இளம் வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 3 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில், இந்திய அணி 13ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.
இந்தப் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், டி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாஹலின் சாதனையை முறியடித்தார்.
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 23, 2025 6:49 AM IST