பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து 402 ரன்கள் சேர்த்தது. 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோகித், கோலி, சர்ஃபராஸ் கான் அரைசதம் அடித்தனர். 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃபராஸ் கானுடன் இணைந்து, ரிஷப் பந்த் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார். இருவரும் அதிரடியாக ரன்மழை பொழிந்து, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்த சர்ஃபராஸ் கான், 150 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பந்த், 99 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 408 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, 54 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்தது. 462 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்ததால், நியூசிலாந்து அணி 107 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் போட்டியைத் தொடரும்படி நடுவரிடம் முறையிட்டனர். எனினும் சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டதால், 4ஆவது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
இறுதிநாள் ஆட்டத்தை ஃபயர் மோடில் ஆரம்பித்தது இந்திய அணி. பும்ரா தனது முதல் ஓவரிலேயே நியூசிலாந்து கேப்டன் டாம் லாதமை பூஜ்யத்தில் வெளியேற்றினார். ஆனால் அந்த ஃபயர் மோட் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
பும்ரா இரண்டாவது விக்கெட்டாக 17 ரன்கள் எடுத்திருந்த டெவான் கான்வேவை வீழ்த்தினார். எனினும், இதன்பின் கூட்டணி சேர்ந்த வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா பார்ட்னர்ஷிப்பை இந்திய பௌலர்களால் உடைக்க முடியவில்லை.
Also Read |
BCCI | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி… பாகிஸ்தானின் புதிய பரிந்துரை… பரிசீலிக்குமா இந்தியா?
இருவரும் நிதானமாக பவுண்டரிகளை விளாசி வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர். இறுதியில் 27.4 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை நியூசிலாந்து அணி எட்டியது. வில் யங் 48 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 39 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பின் இந்திய அணி பெறும் முதல் தோல்வி இதுவாகும். அதேநேரம், 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்றது. கடைசியாக 1988-ல் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
.