தென்னாப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்றிரவு நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் 2 ஆவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரபயிற்சியில் ஈடுபட்டனர்.
சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற தென்னாப்ரிக்கா தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு டி20 போட்டி தொடங்கவுள்ளது.
கடந்த டி20 போட்டியில் அதிரடி காட்டிய இந்திய வீரர் சஞ்சு சாம்சன் மீது இரண்டாவது டி20 போட்டியிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரை தவிர்த்து முன்னணி வீரர்கள் எதிர்பார்த்த திறமையை வெளிப்படுத்தவில்லை.
டி20 போட்டிகளில் சாம்பியனாக இருக்கும் இந்திய அணி, 4 போட்டிகளிலும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் தென்னாப்பிரிக்க அணியில் சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகளையும் அந்த அணி எளிதில் விட்டுக் கொடுக்காது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூடியுள்ளனர்.
இம்மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் ஐபிஎல் அணிகளின் கவனத்தை பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடரில் 4 டி20 போட்டிகளையும் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக பார்க்கலாம்.
.