நான்கு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டிலும் தென்னாப்ரிக்கா ஒரு போட்டியிலும் வெற்றி அடைந்திருந்தது. இந்நிலையில் 4 ஆவது டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இரண்டாவது மற்றும் 3 ஆவது டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்த சஞ்சுசாம்சன் நேற்றைய போட்டியில் முதலில் நிதானமாக ஆடினார். அபிஷேக் சர்மா 36 ரன்களில் வெளியேறினார். பின்னர் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, பந்துகளை சிக்சர்களாக பறக்கவிட்டு வாணவேடிக்கை நிகழ்த்தினார். இருவரும் போட்டிப்போட்டு கொண்டு தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை சிதறவிட்டனர்.
சஞ்சு சாம்சன், திலக் வர்மா இருவரும் சதம் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 109 ரன்களும், திலக் வர்மா 47 பந்துகளில் 120 ரன்களும் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது
284ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்ரிக்கா அணி இந்திய அணியினிப் பந்துவீச்சை சாமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 18.2 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
டி 20 தொடரில் தென்னாப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சஞ்சு சாம்சன்-திலக் வர்மா ஜோடி ஆட்டமிழக்காமல் பார்டனர்ஷிப்பில் 210 ரன்களை குவித்தது சாதனையாகும். 283ரன்களை இந்திய அணி குவித்தது , டி 20 போட்டிகளில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன்களை குவித்திருந்தது இந்திய அணி
ஓராண்டில் டி20போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இந்திய அணி நேற்றைய போட்டியில் 23 சிக்சர்களை பறக்கவிட்டதும் சாதனை பட்டியலில் 3 ஆம் இடத்தை பெற்றுத்தந்துள்ளது . இந்திய அணி 14.1 ஓவரிலேயே 200 ரன்களை குவித்ததும் சாதனையாக உள்ளது. உலகக்கோப்பை டி20 வெற்றிக்கு பிறகு இந்தியா விளையாடிய 5 டி20 தொடர்களையும் வென்று சாதனை படைத்துள்ளது.
.