தங்களை சீண்டினால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்து வரும் ஈரான், கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, பெய்ரூட்டில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட ஹசீம் சஃபிதீன் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களை மீண்டும் சீண்டினால், இஸ்ரேல் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என ஈரான் ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
தேவைப்பட்டால் இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் என ஈரான் நாட்டுத் தலைவர் அயத்துல்லா கமெனி சூளுரைத்திருந்த நிலையில், ராணுவமும் மிரட்டல் விடுத்துள்ளதால், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மீண்டும் மோதல் தீவிரமடையும் என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் மிரட்டல் ஒரு புறம் இருக்கும் நிலையில், வெற்றி கிடைக்கும் வரை தங்களின் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Also Read |
Hezbollah | அடுத்த வாரிசும் கொலை… பின்னடைவை சந்திக்கிறதா ஹிஸ்புல்லா!
தங்கள் ராணுவம் 7 முனை தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறியுள்ள நெதன்யாகு, ஈரானின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைச் சமாளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளர்ந்த நாடுகள் தங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்றும் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எண்ணெய்க் கிடங்குகளைத் தாக்கினால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் எனச் சுட்டிக்காட்டினார்.
.