இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ள ஈரான், பதில் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டையே அழிக்கும் விதமாக பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள மூன்று ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கியதாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹசன் நசருல்லா, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலஸ்தீன், லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம் எனவும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

விளம்பரம்

இஸ்ரேலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாக ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார். நியாயமான உரிமைகளுக்காகவும், ஈரானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காகவும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பதில் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து ஈரான் தலைவர் அலி காமேனி, தனது எக்ஸ் பக்கத்தில் நிலத்தடி ஆயுதக் குவியலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஈரானின் வெற்றி நெருங்கிவிட்டது என்று எச்சரித்துள்ளார். நேர்மையான மக்களை இழக்க நேரிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அலி காமேனி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது அலி காமேனி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ஈரானின் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார். தாக்குதல் முடிவுக்கு வந்த பிறகு அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவத்தினர் இஸ்ரேல் ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார். தங்களை யார் தாக்கினாலும் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், இதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய நெதன்யாகு, இந்த தாக்குதலை முறியடிக்க உதவிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் உலக நாடுகள் இஸ்ரேலுடன் துணை நிற்க வேண்டும் என்றும் நெதன்யாகு கேட்டுக் கொண்டார்.

விளம்பரம்

தொடர்ந்து பேசிய அவர், “இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது” என்றார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்களை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்தம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்று, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிங்க : இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்… 184 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம்…

இதனிடையே, இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜோர்டான், ஈராக், லெபனான் நாடுகளில் விமான சேவை தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

.



Source link