‘ஆணுக்கு இன்னுமொரு ஆண் மீதும் ஒரு பெண்ணுக்கு இன்னுமொரு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது ஒரு நோயல்ல. அதே போன்று இருபாலீர்ப்பு குணமுள்ளவர்கள், திருநர்கள் இவ்வாறானவர் எமது சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். இதுவும் இயற்கையின் படைப்புகளில் ஒன்று என என்கிறார் சுகாதார அமைச்சின் கொள்கை பகுப்பாய்வு மற்றும் அபிவிருத்திக்கான பணிப்பாளரும் சமூதாய மருத்துவருமான வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஹோர்மோன்களின் விளைவுகளால் ஏற்படும் மாற்றங்கள் இவை. அதற்கு இந்த பிரிவினரை அலட்சியப்படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும் அவர்களை குற்றவாளிகள் போன்று பார்ப்பதும் தீர்வாகாது. இவ்வாறானவர்களின் மனநிலையறிந்து அவர்களை முதலில் புரிந்து கொள்வதே நாம் செய்ய வேண்டிய பிரதான காரியமாகும். ஏனென்றால் எமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சமூகங்களின் மத்தியில் இந்த பிரிவின் இருப்பதைப் போன்றே எமது குடும்பத்திலும், உறவினர்களிலும் இவ்வாறானவர்கள் இருக்கலாம்..” எனத் தெரிவித்திருந்தார்.

மேற்படி பிரிவினர் பற்றிய ஒரு அறிமுகமும், ஊடகத்தினர் இவர்களைப் பற்றிய செய்திகளை நெறிமுறைக்கேற்ப எவ்வாறு கையாள வேண்டும் என்ற விளக்கத்தையும் பெறும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற இரண்டு நாள் பயிற்சி பட்டறையின் போது வளவாளராக கலந்து கொண்ட டாக்டர் ஜானகி, இவர்கள் எமது சமூதாயத்தில் எவ்வாறு அலட்சியப்படுத்தப்படுகின்றனர் என்பது குறித்தும் அவர்களின் மனநிலை எப்படியானது என்பது பற்றியும் விளக்கங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வை ‘சமத்துவத்தை தேடுதல்’ (Bridge to Equality) அமைப்பானது ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையில் LGBTQ சமூகத்தினர் முகம்கொடுக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பகுப்பாய்வை முன்னெடுத்து வரும் இந்த அமைப்பானது அவர்களை ஒன்றிணைத்து அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் அணுகும் ஒரு அமைப்பாக உள்ளது. மேலும் குடும்பத்தினராலும் சமூகத்தினராலும் ஒதுக்கப்பட்ட இப்பிரிவினரை அணுகி அவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளை வழங்கி அவர்களும் சமூகத்தில் ஏனையோர் போன்று வாழ்வதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை முக்கிய விடயம்.

LGBTQ என்றால் என்ன?

ஓரின சேர்க்கை பெண்கள், ஓரின சேர்க்கை ஆண்கள், இருபாலின சேர்க்கை , மாற்று பால் நிலை கொண்ட நபர்கள் , பாலிர்ப்பு மற்றும் பால் அடையாளம் கேள்விக்குறியாக உள்ளவர்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களாகும்.

1) L –Lesbian (தன்பாலீர்ப்புள்ள பெண்) உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆத்ம ரீதியாக பெண் மீது இன்னுமோர் பெண் ஈர்ப்படைவது.

2) G- Gay (தன்பாலீர்ப்புள்ள ஆண்) உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆத்ம ரீதியாக ஆண் மீது இன்னுமோர் ஆண் ஈர்ப்படைவது. பொதுவாக ஆண்களை நேசிக்கும் ஆண்களை விவரிக்க பயன்படுவது.

3) B–Bisexual (இருபாலீர்ப்பு ) ஒரு நபர் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஆத்ம ரீதியாகவும் ஆண்,பெண் இருபாலர் மீதும் ஈர்ப்படைவதாகும்.

4) T- Transgender ( திருநர்) ஒரு நபரின் தனிப்பட்ட அடையாளம் மற்றும் பாலினம் போன்றவை அவர்களுக்கு பிறப்பில் குறிக்கப்பட்ட அடையாளத்துடன் பொருந்தாதவர்களாகும்.

5) Q- Questioning (கேள்விக்குறியானவர்கள்) தன்னுடைய பாலியல் அல்லது பாலின அடையாளத்தை கேள்விக்குட்படுத்தும் நபர்.

சட்டங்கள் என்ன கூறுகின்றன?

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி உறுப்புரை (12)2 இன் கீழ் ‘பால்’ மற்றும் ‘அத்தகைய பிற காரணங்களின்’ அடிப்படையிலான பாகுபாட்டிலிருந்து இலங்கையில் வாழும் தனிநபர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள். எனினும் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் 1833 ஆண்டின் இலங்கை தண்டனை சட்டக்கோவையின் ‘இயற்கைக்கு விரோதமான தவறுகள்’ என்ற விவரிப்பில், ஒரே பாலினத்தவர்களின் பாலியல் செயற்பாடுகள் குற்றமாகக் கருதப்படுகின்றன. சமூகத்தில் பாரம்பரியமாக விளங்கி வரும் நம்பிக்கைகளின் காரணமாகவும் இலங்கை ஒரு இறுக்கமான பெளத்த கலாசாரத்துடன் பிணைந்திருக்கின்றமையினாலும் ஒரே பாலின பாலியல் உறவுகளுக்கு எதிரான சட்ட, அரசியல் மற்றும் சமூகத்தடைகள் இதற்கு எதிராக இருக்கின்றன. எனினும் இதை குற்றமற்ற உறவு என்ற அடிப்படையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை சாத்தியமாகவில்லை.

மனித உரிமைகள் மீறப்படுவது கவலைக்குரியது

சட்டங்கள் இப்பிரிவினருக்கு பாதகமாக இருக்கும் அதே வேளை இவர்களை புரிந்து கொள்ளாத சமூகமானது இவர்களை மிக இழிவாக பேசியும் அலட்சியப்படுத்தியும் சில நேரங்களில் கடுமையான தண்டனைகள் கொடுத்தும் வருகின்றமையானது மனித உரிமை மீறல் என்ற வகையில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என இவர்களைப் பற்றிய பகுப்பாய்வில் ஈடுபட்டுள்ள சிவில் சமூக அமைப்புகள் கூறுகின்றன. இப்பிரிவினரில் படித்த வாண்மைத்துவமிக்கவர்களும் இருக்கின்றனர். இவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் முதல் மூன்று தரப்பினராக பொலிஸார், வைத்தியர்கள், அரச அதிகாரிகள் விளங்குகின்றனர். இவர்களை பாலியல் தொழிலாளர்களாக நோக்கும் சந்தர்ப்பங்களும் அதிகமாக உள்ளன. பாடசாலை மட்டத்தில் பாலியல் கல்வியின் செயற்பாடுகள் பூஜ்ய நிலைமையில் இருப்பதால் பட்டதாரி அதிபர்கள் , ஆசிரியர்களுக்குக் கூட இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்படும் மாணவர்கள் பற்றிய தெளிவின்மை உள்ளது.



Source link