குரங்கு பொம்மை புகழ் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, முனீஸ்காந்த் மற்றும் பலரது நடிப்பில் இந்தப் படம் உருவானது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியான படங்களில் ‘மகாராஜா’ லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து ரூ.110 கோடி வசூல் சாதனை படைத்து மிகப்பெரிய பேசுபொருளானது.
ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் 50வது படம் அவருக்கு மிகப்பெரிய பெயரைக் கொடுத்தது. படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபல Netflix ஓடிடி நிறுவனம் ‘மகாராஜா’ படத்தை ரூ.17 கோடிக்கும் வாங்கியது. திரையரங்கில் சக்கைப்போடு போட்ட ‘மகாராஜா’ ஓடிடியில் வெளியாகி ரூ. 150 கோடி வசூலித்து கெத்து காட்டியது. மகாராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் அடித்த நிலையில், படத்தை சீன மொழியில் டப் செய்து சீனாவில் வெளியிடவுள்ளதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதையும் படிங்க:
8.2 IMDB ரேட்டிங்.. 22 விருதுகள்,பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் படம் எது தெரியுமா?
தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் வருகிற 29ம் தேதி (நவம்பர்) சீனாவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை சீனாவில் அலிபாபா குரூப்ஸ் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீனாவில் மகாராஜா திரைப்படம் மொத்தம் 40,000 திரைகளில் திரையிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படம் சீனாவில் வெளியாகி ரூ. 1300 கோடி வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சீனாவில் வெளியாகவிருக்கும் மகாராஜா திரைப்படம் ‘டங்கல்’ படம் நிகழ்த்திய வசூல் சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
.