Last Updated:
மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘பரோஸ்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அந்தப் படம் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது. படத்தின் நஷ்டம் குறித்து பேசியிருக்கும் மோகன்லால், “இந்தப் படத்தை பணம் சம்பாதிக்க இயக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 6 ஆண்டு உழைப்பில் மோகன்லால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பரோஸ்’. குழந்தைகளுக்கான கதையை மையமாக கொண்ட இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என கூறப்படுகிறது. படத்தின் பிரமாண்ட காட்சிகளும் இதனை உறுதி செய்கின்றன.
இதனை மோகன்லால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தார். ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் வசூலில் மந்தமான நிலையே நீடிக்கிறது. 2024-ல் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மலைக்கோட்டை வாலிபன்’ மற்றும் ‘பரோஸ்’ ஆகிய இரண்டுமே படுதோல்வியை தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘பரோஸ்’ படத்தின் வசூல் பின்னடைவு குறித்து மோகன்லால் கூறுகையில், “இந்தப் படத்தை நான் பணம் சம்பாதிக்கவோ, லாபமடையவோ இயக்கவில்லை. திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று எண்ணி தான் இந்தப் படத்தை இயக்கினேன்.
கடந்த 47 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கும், அன்புக்கும் பிரதிபலனாக அவர்களுக்கு நான் இந்த கிஃப்டை கொடுத்துள்ளேன். இது அவர்களுக்காக நான் உருவாக்கிய பரிசு. நான் குழந்தைகளுக்கான திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இதனை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் காணலாம். இது உங்களுக்குள் இருக்கும் குழந்தையை வெளியே கொண்டு வரும்” என்றார்.
January 01, 2025 4:34 PM IST