Nvidia கிராஃபிக்ஸ் கார்டுகளுக்காக ஃபாக்ஸ்கான் நிறுவனம் மெக்சிகோவில் சூப்பர் சிப் தயாரிப்பு ஆலையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் ஆப்பிள் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு எலட்ரானிக்ஸ் பொருட்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. 1974 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்கள், முன்னணி நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
தைவான் நாட்டின் நியூ தைபே சிட்டியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 192 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வருமானத்தை பெற்றுள்ளது. பாக்ஸ்கானில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தலாம்.
ஆசியா, கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்கா உள்ளிட்டவற்றில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்காக சுமார் 13 லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட் எனப்படும் ஜிபியு தயாரிப்பு நிறுவனமான NVIDIA க்கு சூப்பர் சிப்களை தயாரிக்க ஃபாக்ஸ்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஃபாக்ஸ்கானின் நிர்வாக அதிகாரிகள் மெக்சிகோ நாட்டில் மிகப்பெரும் தொழிற்சாலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பான தகவல்கள் கடந்த சில நாட்களாக இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஜிபியு சர்வதேச மார்க்கெட்டில் NVIDIA சுமார் 80 சதவீதம் அளவுக்கு தனது பொருட்களை சந்தைப்படுத்தியுள்ளது. வீடியோ கேம், 3டி, ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் என்விடியா கிராபிக்ஸ் கார்டுகள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன.
உலகில் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களால் இந்த என்விடியா கிராஃபிக்ஸ் கார்டுகளை உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரும் பொருட் செலவில் சூப்பர் சிப் தயாரிப்பு ஃபேக்டரி மெக்சிகோவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஆலை முழு உற்பத்தி திறனை எட்டும் என்று ஃபாக்ஸ்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் ஃபாக்ஸ்கான் தொடர்ந்து அதிகளவு முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்கள் துறையிலும் ஃபாக்ஸ்கான் தடம்பதிக்க தொடங்கியுள்ளது. இந்த துறையில் ஏராளமான போட்டியாளர்கள் இருப்பினும், புதுமைகளை புகுத்தி இந்த துறையிலும் ஃபாக்ஸ்கான் மாற்றங்களை கொண்டு வரும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
.