யாருக்கும் அடிபணியாமல், தனக்கு தோன்றதை செய்வதால் 5வது முறையாக டிரான்ஸ்ஃபர் வாங்கி கொண்டு கேரளாவின் செப்பன்தொட்டா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேர்கிறார் கார்த்திக் (ஆசிஃப் அலி). அதே காவல்நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஜெயசங்கர் (பிஜுமேனன்) கறார் பேர்வழி. சில சம்பவங்களால் ‘ஈகோ’ தலைதூக்க அவருக்கும் கார்த்திக்கும் மோதல் வெடிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, ஜெயசங்கர் வீட்டு மொட்டை மாடியில் சாக்கு மூட்டையில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு கிடக்கிறார். இதற்கு ஜெயசங்கர் தான் காரணம் என கூறி, அவர் கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கிறார் கார்த்திக். இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின்றன. உண்மையில் அந்த பெண்ணை யார் தான் கொன்றார்கள்? ஜெயசங்கர் எப்படி இதில் சிக்கினார்? என்பது தான் ‘தலவன்’ (thalavan) மலையாள படத்தின் கதை. இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
வழக்கமான கொலையை கண்டறியும் த்ரில்லர் பாணியை மாற்ற, இயக்குநர் கையிலெடுத்திருக்கும் ‘ஈகோ’ ப்ளேவர் திரைக்கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஒரு கொலை நடந்துவிட, அதைச்சுற்றியிருக்கும் மர்மங்களை விலக்கும் காட்சிகளுக்குள், இருவரின் ஈகோ நுழைந்துவிட அடுத்து என்ன என்பதை அறியும் ஆவல் படத்தின் பலம். பிஜுமேனன் – ஆசிஃப் அலியும் முறுக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் ‘அய்யப்பன் கோஷி’ வகை.
இதையும் வாசிக்க: OTT: மிரள வைக்கும் திரில்லர்.. நொடிக்கு நொடி சஸ்பென்ஸ்.. வீக் எண்ட்டுக்கு ஏற்ற படம் இதுதான்!
நூல் பிடித்து நகர்ந்து அடுத்து என்ன என்று ஆர்வமூட்டும் திரைக்கதையில், காவல் துறையின் அதிகார அத்துமீறலையும், அவர்களுக்குள் நிகழும் ‘பழிவாங்கல்’ போக்கையும் அழுத்தமாக பதிய வைக்கிறது படம். இறுதி வரை யார் தான் கொலையாளி, அவருக்கான தண்டனை என்ன என்பதை கணிக்க முடியாதபடி, கடக்க வைத்ததில் திரைக்கதை ஆசிரியர்கள் ஆனந்த் – சரத் வெற்றி பெற்றுள்ளனர்.
திருப்பங்களை கொண்டு நகரும் கதையில், இறுதியில் யார் தான் குற்றவாளி என்பதை அறிந்துகொள்ள வைக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தி ‘என்கேஜிங்’காக கொண்டு சென்றதால் அயர்ச்சி ஏற்படவில்லை. ஆனால், பசியை அதிகரித்து இறுதியில் பிரியாணியில் பீஸுக்கு பதிலாக தக்காளியை நிரப்பியது போல சிறு ஏமாற்றம் சிலருக்கு இருக்கலாம். அது அவரவர் ரசனைக்கு உட்பட்டது.
கருணையில்லாத ‘கறார்’ போலீஸ் அதிகாரியாக பிஜு மேனன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். யாரையும் மதிக்காத போக்கு, எப்போதும் சிடுசிடு என இருப்பது என கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். நேர்மையை தான் அணிந்திருக்கும் உடையின் ‘ஸ்டார்’களில் ஒன்றாக பொருத்திக் கொண்டு, யாருக்கும் அடிபணியாத, கதாபாத்திரம் ஆசிஃப் அலி உடையது. இருவரும் கிட்டதட்ட ‘கறார்’, ‘நேர்மை’ புள்ளிகளில் இணைந்தாலும், இரக்கத்தால் வேறுபடும் கதாபாத்திரங்கள்.
இவர்களை தவிர்த்து, மியா ஜார்ஜ், அனுஸ்ரீ இரண்டு பெண் கதாபாத்திரங்களுக்கும் பெரிய அளவில் வேலை இல்லை. திலீஷ் போத்தன், ஜோஜி ஜான், ரஞ்சித், கோட்டயம் நசீர், ஜாபர் இடுக்கி, பிலாஸ் சந்திரஹாசன் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.
சஸ்பென்ஸையும், விறுவிறுப்பையும் கூட்டி படத்தின் போக்குக்கு தனது பின்னணி இசையால் வலு சேர்க்கிறார் தீபக் தேவ். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவும், சூரஜ்ஜின் நேர்த்தியான கட்ஸும் படத்துக்கு ப்ளஸ்.
பெரிய அளவில் எங்கும் போரடிக்காமல் ஒரே மூச்சில் பார்த்துவிடக்கூடிய இந்தப் படம் சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. குறிப்பாக தமிழிலும் இந்தப் படத்தை பார்க்க முடியும். த்ரில்லர் களமும், திகைப்புடன் ட்விஸ்டும் இந்தப் படத்தின் வீக் என்ட் ஸ்பெஷலுக்கான காரணங்கள்.
January 04, 2025 4:49 PM IST