Last Updated:

Pisasu 2 | ‘பிசாசு 2’ விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும், வழக்கில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஜனவரி 21 தேதி தள்ளிவைத்தார்.

News18

மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்ற ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி, 4 கோடியே 85 லட்சம் ரூபாயில் இரண்டு கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது. இந்தத் தொகையைத் திருப்பிக் கொடுக்காமல் ‘குருதி ஆட்டம்’, ‘மன்மத லீலை’ ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

இந்த படங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 ரூபாயும், ஜிஎஸ்டி 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்க ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி பணத்தைச் செலுத்தாமல் ‘பிசாசு 2’ படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், அந்தப் படத்தை வெளியிட தயாராக உள்ளதாகக் கூறி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: OTT Review | ஈகோவும்…ஈரக்கமில்லாத க்ரைமும்! – மிஸ்பண்ணக்கூடாத மலையாள த்ரில்லர்

அந்த மனுவில், மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின்படி, வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 84 லட்சத்து 43 ஆயிரத்து 794 ரூபாய் செலுத்தும் வரை ‘பிசாசு 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘பிசாசு 2’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ராஜேஷ், ஏற்கனவே படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மார்ச் மாதம் படம் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ‘பிசாசு 2’ விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும், வழக்கில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி ஜனவரி 21 தேதி தள்ளிவைத்தார்.



Source link