Last Updated:

Rajini | நடிகர் ரஜினிகாந்த் தனது பள்ளிப்பருவ நினைவுகளை வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அன்று அவர் நடித்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இன்று நடிகனாக காரணம் என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

News18

நடிகர் ரஜினிகாந்த் தனது பள்ளிப்பருவ நினைவுகளை வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அன்று அவர் நடித்த கதாபாத்திரத்துக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இன்று நடிகனாக காரணம் என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் படித்த ஆச்சார்யா பாத ஷாலா (Acharya Pathashala) (APS) பள்ளியின் 90வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. பெங்களூருவில் உள்ள இந்தப் பள்ளியில் தான் படித்த நினைவுகளை வீடியோ ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக கன்னடத்தில் பேசி வீடியோ வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், பள்ளி காலத்தில் தான் சிறந்த மாணவராக இருந்ததாகவும், க்ளாஸ் லீடராக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நடுநிலைப்பள்ளியில் 98 சதவீத மதிப்பெண்களைப் பெற்றதைக் கண்ட அவரது மூத்த சகோதரர் ஏபிஎஸ் ஆங்கில வழி பள்ளியிலும், கல்லூரியிலும் தன்னை சேர்த்துவிட்டதாகத் தெரிவித்தார். அவர் கூறும்போது, “முழுக்க முழுக்க கன்னடப் பள்ளியில் படித்த பிறகு, ஆங்கில வழிப் பள்ளியில் படிப்பது கடினமாக இருந்தது.

எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில் இருப்பதைக் கண்டு நான் மனமுடைந்து போனேன். முதல் பெஞ்ச் மாணவராக இருந்த நான் கடைசி பெஞ்சுக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏபிஎஸ் பள்ளி ஆசிரியர்கள் அன்புடனும், கனிவுடனும் நடந்துகொண்டனர்.

கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கடினமாக இருந்ததால் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. வேதியியல் ஆசிரியர் எனக்காக அவரது வீட்டில் சிறப்பு வகுப்பெடுத்தார். அவர் மற்ற மாணவர்களிடம் கட்டணம் பெற்றபோதிலும், எனக்கு இலவசமாக சொல்லிக்கொடுத்தார். அவரால் நான் அடுத்த ஆண்டே பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன்” என பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.

மேலும், “பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். அதில் 10, 15 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பார்கள். எனக்கு கதை சொல்வதில் அதிக ஆர்வம் இருந்தது. இதைக் கண்ட ஆசிரியர்கள் ‘ஆதிசங்கரும், சண்டாளரும்’ நாடகத்தில் என்னை நடிக்க வைத்தார்கள்.

அந்த நாடகத்தில் ‘சண்டாளர்’ கதாபாத்திரத்தில் நடித்தேன். அதில் எங்கள் அணி வெற்றிபெற்றதுடன் எனக்கு சிறந்த நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது. அன்று எனக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இன்று நான் நடிகனாக இருக்க காரணமாக அமைந்தது” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.





Source link