Last Updated:
இதுவரை 14 இந்திய வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். சர்வதேச அளவில் 78 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அறிவித்தார். அஸ்வினின் இந்த எதிர்பாராத அறிவிப்புக்கு பல கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.
இதுவரை 387 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4394 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 765 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவராக உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத ஒரு சாதனையை படைத்துள்ளார்.
பல்வேறு அரசியல் காரணங்களால், 2007ஆம் ஆண்டு முதல் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஐசிசி தொடர்களை தவிர்த்து மற்ற போட்டிகள் ஏதும் நடத்தப்படுவதில்லை.
இதையும் படிக்க: “தோனி கூறிய அட்வைஸால் தான்…” – இரட்டை சதம் விளாசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன தகவல்
இதுவரை 14 இந்திய வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். சர்வதேச அளவில் 78 வீரர்கள் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்களில் அனைவரும் பாகிஸ்தான் அணியுடன் குறைந்தது ஒரு டெஸ்ட் போட்டியிலாவது விளையாடியுள்ளனர். ஆனால் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள ஒருவர், பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறை.
சர்வதேச போட்டிகளில் கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமானார் அஸ்வின். இதனால் பாகிஸ்தான் அணியுடன் அவரால் ஐசிசி தொடர்களை தவிர்த்து மற்ற போட்டிகளில் விளையாட முடியவில்லை. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த 2019ஆம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியா இரண்டு முறை விளையாடி இருந்தாலும், ஒரு முறை கூட இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தகுதி பெற முடியவில்லை.
அடுத்த ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டிக்கும் பாகிஸ்தான் அணி தகுதி பெறாததால், ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தானுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வு பெற்றுள்ளார். இந்த சாதனையை மேலும் இரண்டு இந்தியர்கள் பெற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கிறார்கள் ரசிகர்கள்.
விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரும் 100 டெஸ்ட் போட்டிகளை கடந்த ஜாம்பவான்கள். இவர்கள் இதுவரை தங்களது ஓய்வை அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் முன் இவர்கள் தங்களது ஓய்வை அறிவித்தால், இந்த இருவரும் இந்த சாதனை பட்டியலில் சேருவார்கள் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
December 23, 2024 1:22 PM IST