2011 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி. ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் விளையாடின. களத்தில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என அழைக்கப்படும் மேற்கு இந்திய தீவுகளின் கிறிஸ் கெயில். சிக்சர் மன்னனுக்கு எதிராக தோனி யாரை இறக்குவார் என மைதானமே காத்திருந்த நேரத்தில், சென்னை பாய் அஸ்வினிடம் பந்தை தந்தார் “மிஸ்டர் கூல்” தோனி. மூன்றே பந்துகள்தான். கெயிலை பெவிலியன் அனுப்பினார் அஸ்வின்.
அன்று முதல் அஸ்வின் தொட்டது எல்லாம் பொன்தான். இன்று நமக்கு பவுலராகத் தெரியும் அஸ்வின், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியது என்னவோ ஒரு பேட்ஸ்மேனாகத்தான். முதல்தரப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்திருந்தாலும், அனிருத், முரளி விஜய், பத்ரிநாத், தினேஷ் கார்த்திக் என பலத்த போட்டி காரணமாக, தனது ரோலை மாற்றிக் கொண்டார். எதையும் எளிதில் விட்டுக்கொடுக்காத அஸ்வின், தீவிரப் பயிற்சிக்குப் பின் தேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் ஆனார்.
இதையும் படிக்க: பத்துக்கு பத்து வீடு..! ஆஸ்பெஸ்டாஸ் கூரை..! சாதித்து காட்டிய கேரம் நாயகி காசிமா
அஸ்வினை தோனி வளர்த்தெடுத்தாலும், அவரது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான். ஐபிஎல் தொடர் துவங்கிய காலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால் ஸ்ரீகாந்த் சிஎஸ்கே சிஇஓ காசி விஷ்வநாதனிடம் கேட்ட ஒரு கேள்வியால் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றார்.
சர்வதேச போட்டிகளில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், அதே தொடரில் சதம் அடித்தும் அசத்தினார். தனது டெஸ்ட் வரலாற்றில் 537 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அஸ்வின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு அடுத்தப்படியாக 37 முறை 5 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமன்றி, ஒரு நாள் போட்டிகளிலும் தான் தனித்துவமான வீரர் என்றே நிரூபித்துள்ளார் அஸ்வின். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்றார்.
டி20 சர்வதேச போட்டிகளிலும் அஸ்வின் பங்கு அளப்பரியது. 2022 டி20 உலகக் கோப்பையில் மெல்பர்னில் பாகிஸ்தானுக்கு எதிராக அவரது சமயோசித பேட்டிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. இதேபோல 2014ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதற்காக புதுப்புது பந்துவீச்சு முறையை சோதித்துப் பார்ப்பதில் வல்லவர் அஸ்வின். அவரது கேரம் பால் பவுலிங் இன்றளவும் பேட்ஸ்மேன்களுக்கு அலர்ஜியே. கேரம் போர்டில் காயினை அடிப்பது போல், கிரிக்கெட் பந்தை நடுவிரலால் அஸ்வின் சுண்டி வீசினால் அது கட்டாயம் விக்கெட்தான்.
எதிராளி எப்பேர்ப்பட்ட ஜாம்பாவானாக இருந்தாலும், தனது நிலையை மாற்றிக் கொள்ளாதவர் அஸ்வின். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பட்லருக்கு எதிரான அவரது ‘மன்கட்’. அஸ்வின் போட்டி அறத்துடன் விளையாடவில்லை என பலரும் குற்றஞ்சாட்டிய நிலையில், விதிப்படியே செயல்பட்டேன் என பதிலடி தந்தார்.
இதையும் படிக்க: “நாங்கள் தான் கடைசி ‘OG’-களாக இருப்போம்…” – அஸ்வின் ஓய்வு அறிவிப்பை வருத்தத்துடன் கேட்ட ரோகித் சர்மா
டெஸ்ட், ஒரு நாள், டி20 என 3 விதமான போட்டிகளிலும் தனது தனித்திறமையை நிரூபித்த அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
நீலம், வெள்ளை சட்டைகளில் இருந்து அஸ்வின் விடைபெற்றாலும், அஸ்வினை இனி மஞ்சள் சட்டையில் பார்க்கலாம். ஆம், வருகிற ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவது ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம் தான்.
December 19, 2024 10:35 AM IST