பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் தான் சைஃப் அலிகான். 1993ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான சைஃப் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். விக்ரம் வேதா, ரேஸ், தேவரா, ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சைஃப் அலிகானும், நடிகை கரீனா கபூரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இந்த நட்சத்திர தம்பதிக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர்.

சைஃப் அலிகான் தனது குடும்பத்துடன் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அதிகாலை 2.30 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தபோது மர்ம நபர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருக்கிறார்.

இதைப்பார்த்த பணிப்பெண் அவரை தடுத்து நிறுத்த, அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார் அந்த மர்மநபர். சத்தம் கேட்டு சைஃப் அலிகான் எழுந்து அந்த நபரை பிடிக்க முயல, அவர் தான் வைத்திருந்த கத்தியால் சைஃப் அலிகானை சரமாரியாக குத்தி இருக்கிறார்.

அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த திருடனை சைஃப் அலிகான் பார்த்துவிடவே, இரண்டு பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சைஃப் அலிகானின் அலறல் சத்தத்தை கேட்டு, குடும்பத்தினர் மற்றும் வீட்டு பணியாளர்கள் எழுந்து வர மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். கத்திக் குத்தில் காயமடைந்த சைஃப் அலிகான் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சைஃப் அலிகானை 6 இடங்களில் திருடன் குத்தியதாகவும், இதில் இரு குத்துகள் உடலில் ஆழமாக பாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் முதுகுத் தண்டுவடம் அருகே ஒரு குத்து பலமாக விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கத்திக் குத்தில் காயமடைந்த சைஃப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகர் சல்மான்கானை மிரட்டி வரும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள், சைஃப் அலிகானையும் தொடர்ந்து மிரட்டி வந்தது. சில நாட்களுக்கு முன்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் சல்மான்கான் வீட்டின் வெளிப்புறம் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பிறகு சைஃப் அலிகான் மீதான இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சைஃப் அலிகான், பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு ஆவார். இவரது தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதும், தாயார் பிரபல நடிகை சர்மிளா தாகூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்தது திருடனா? அல்லது அவரை கொலை செய்யும் நோக்கில் வந்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை போலீசார் தனிப்படை அமைத்து கட்டடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். மூன்று குழுக்கள் மும்பையின் வெவ்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்றுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Also Read | டிரஸ்ஸிங் ரூம் பேச்சுக்களை கசியவிட்டாரா சர்ஃபராஸ் கான்? – கம்பீர் புகாரும்.. ஹர்பஜன் எதிர்வினையும்!

சைஃப் அலிகானின் வீட்டைச் சேர்ந்த ஒருவரே மர்மநபர் வீட்டிற்குள் நுழைய உதவியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றவாளியின் காட்சிகள் சிக்கியுள்ள நிலையில், அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை முடிந்து அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



Source link