இந்தி திரையுலகில் முன்னணியில் உள்ள சைஃப் அலி கான், கரீனா கபூர் தம்பதி, மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள சத்குரு சரண் குடியிருப்பில் 11 மற்றும் 12-ஆவது மாடியில் வசித்து வருகின்றனர். 11ஆவது மாடியில் 6 வயதான மகன் தைமூர், 4 வயதான இளைய மகன் ஜெஹாங்கிர் ஆகியோருடன் தங்கியிருந்தனர். தைமூருடன் உதவியாளராக கீதாவும், ஜெஹாங்கிருடன் எலிம்மா பிலிப்-பும் தனித்தனி அறைகளில் தங்கியுள்ளனர்.

இந்த சூழலில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் சைஃப் அலி கான் இல்லத்துக்குள் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நுழைந்துள்ளார். முதலாவதாக இளைய மகன் ஜெஹாங்கிரின் அறைக்குள் நுழைந்துள்ளார். அவரை ஜெஹாங்கிரின் உதவியாளர் எலிம்மா பிலிப் தடுத்துள்ளார். அப்போது, ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு அந்த நபர் மிரட்டிய நிலையில், எலிம்மா சத்தம் போட்டுள்ளார்.

இதனைக் கேட்டு அங்கு வந்த சைஃப் அலி கான், மர்ம நபரை தடுக்க முயற்சித்துள்ளார். தன்னிடம் வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கான் மீது மர்ம நபர் தாக்கியுள்ளார். இதில் 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மர்ம நபர், தீ ஏற்படும்போது தப்பிப்பதற்கான அவசரகால வழியைப் பயன்படுத்தி வெளியேறியுள்ளார்.

இதையும் வாசிக்க: VIshal | எதற்கும் கலங்காத நான்..வரலட்சுமிக்காக அழுதேன் – நடிகர் விஷால் பகிர்வு

54 வயதான சைஃப் அலி கானுக்கு ரத்தம் சொட்டிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவியாளர்கள் முன்வந்தனர். அப்போது, சாலையில் சென்ற ஆட்டோவை அழைத்துள்ளனர். அந்த வழியாக பஜன் சிங் ராணா என்பவர், தனது ஆட்டோவில் வந்துள்ளார். குடியிருப்பிலிருந்து ஆட்டோவுக்கு அழைப்பு விடுத்ததைக் கேட்டதும் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார்.

ரத்தம் சொட்டிய நிலையில், சைஃப் அலி கானுடன், அவரது 6 வயது மகன் தைமூரும், மற்றொரு நபரும் ஆட்டோவில் ஏறியுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சைஃப் அலி கானுக்கு கழுத்துப் பகுதியிலிருந்து ரத்தம் சொட்டிய நிலையில், அவர் அணிந்திருந்த குர்தா ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தார். முதலில் சைஃப் அலிகான் தான் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தானாகவே நடந்துவந்து, ஆட்டோவில் அமர்ந்ததாகவும் குறிப்பிட்டார். சுமார் 10 நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்த நிலையில், ஆட்டோவிலிருந்து இறங்கி மருத்துவமனைக்கு நடந்தே சென்றார். ரத்தம் சொட்டிய நிலையில், சிங்கம் போன்று நடந்து வந்ததாகவும், அவர் உண்மையான நாயகன் என்றும் அவரை முதலில் பார்த்த மருத்துவர் நீரஜ் உத்தாமணி குறிப்பிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்தபோது, 6 இடங்களில் கத்திக்குத்து இருந்ததும், முதுகுத்தண்டுவடம் அருகே இரண்டரை அங்குலம் அளவுக்கு கத்தி உடைந்திருந்ததும் தெரியவந்தது. மேலும், முதுகுத்தண்டுவடத்திலிருந்து திரவம் வெளியேறியது.

உடனடியாக ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், கத்தியை அகற்றினர். கழுத்து மற்றும் இடதுகைப் பகுதியிலும் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, 20 தையல்கள் போடப்பட்டன.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சாதாரண வார்டுக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டார். அபாய கட்டத்தைத் தாண்டியுள்ள நிலையில், இரண்டு அல்லது மூன்று நாட்களில் சைஃப் அலி கான் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்காக காப்பீட்டு நிறுவனத்திடம் 35 லட்சம் ரூபாய் கோரப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், சைஃப் அலி கான் செவ்வாய்க்கிழமை வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சைஃப் அலி கானை, கத்தியால் குத்திய கொள்ளையன், செல்போன் கடை ஒன்றில் ஹெட்செட் வாங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தாதர் அருகே உள்ள கபூதார்கானா என்ற இடத்தில், இக்ரா என்ற செல்போன் கடையில், அவர் ஹெட்செட் வாங்கி சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவலர்கள், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





Source link