Last Updated:

 Sangam Age Artifacts | விழுப்புரத்தில் சங்ககால நாகரீகம் தொல் பொருட்கள் கண்டுபிடிப்பு.

X

விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் இதுவரை கண்டிராத தொல்லியல் அதிசயப்பொருட்கள்…

விழுப்புரம் அருகேயுள்ள அகரம் பகுதியில் பம்பை ஆற்றங்கரையோரம் சங்ககால நாகரீகத் தொல்பொருட்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே பம்பை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள அய்யங்கோயில்பட்டு மற்றும் தென்னமாதேவி ஆகிய ஊர்களில், பெஞ்சு புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பினால் ஊரின் மேற்பரப்பில் சங்ககால வாழ்விடப் பகுதியின் தொல்பொருள் எச்சங்கள் வெளிப்பட்டதை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறையில் இளங்கலை வரலாறு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான சத்திஷ்குமார் மற்றும் வீரவேல் ஆகியோர் கண்டெடுத்து பேராசிரியர் ரமேஷுக்கு தகவல் அளித்தனர்.

பேராசிரியர் ரங்கநாதன் மற்றும் கீழடி தொல்லியல் வல்லுநர் மு. சேரன் மற்றும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் இப்பகுதியினை முழுமையாக மேற்பரப்பில் ஆய்வு செய்து, மேலும் பல தொல்லியல் எச்சங்களை கண்டுபிடித்தனர்.

இந்த மேற்பரப்பாய்வில் புதிய கற்காலம் தொடங்கி சோழர்காலம் வரையிலான பலதரப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. நன்கு மெருகேற்றப்பட்ட உளி போன்ற அமைப்புடைய செல்ட்(Celt) (புதிய கற்கால கருவி) ஒன்றும், இரு முனை கொண்ட கற்கோடாரி, அரியவகை கல் மணிகள், பீப்பாய் வடிவ சூதுபவளம்(Carnelian bead) மணிகள், பொத்தான் வடிவ மற்றும் துண்டிக்கப்பட்ட ஸ்படிக(Quartz bead) மணிகள், பல நிறங்கள் கொண்ட பல வடிவங்களில் கண்ணாடி மணிகள் மற்றும் அகேட்(Agate bead) மணிகளும் கிடைத்துள்ளது. சுடுமண்ணாலான பொருட்களைப் பொறுத்தவரை பெண் தலை உருவம் (Human figurine), நூல் நூற்கும் தக்களி (Spindle whorl), ஆட்டக்காய்கள்(Gamesmen), காதணிகள் (Ear ornament), வட்டசில்லுகள்(Hopscotch), மணிகள்(Beads) மற்றும் முத்திரை(Seal), புலி மற்றும் இரட்டை மீன்களோடு “உத்தமசோழ”க என்று தேவநாகரி எழுத்து பொறிக்கப்பட்ட செப்புக்காசு, போன்றவைகளும் கிடைத்துள்ளது. அதோடு மட்டுமல்லாது செங்கல்லின் அளவுகள் 41செ.மீ நீளமும், 25செ.மீ அகலமும், 7.05செ.மீ கனமும் கொண்டுள்ளது. இது சங்க கால (வரலாற்றின் தொடக்க காலம்) செங்கல்லுடன் ஒத்துப் போகிறது.

இதையும் வாசிக்க: Pongal Festival 2025: வட மாநில மாணவர்கள் கொண்டாடிய பொங்கல் விழா… களைகட்டிய தஞ்சை வேளாண் கல்லூரி…

மேற்கூறிய தொல்பொருட்களோடு கருப்பு நிற பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பூச்சு பூசப்பட்ட பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள் மற்றும் ஆரஞ்சு நிற பானை ஓடுகள் ஆகியவைகள் கிடைத்திருப்பது பம்பை ஆற்றில் பழமையான சங்ககால நாகரிகம் சிறப்பாக இருந்தது என்பதை தற்போது கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் மூலமாக உறுதியாகிறது என பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும், மக்கள் வாழும் பகுதியில் சங்ககால எச்சங்கள் கிடைத்துள்ளதால் அகரம் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அகரம் பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள சங்ககால எச்சங்கள் இதுவரை விழுப்புரம் பகுதியில் கண்டறியப்படவில்லை என்றும் இப்பகுதியில் அகழாய்வு செய்தால் பண்டைய கால நாகரிகம் தென்படும் என தெரிவிக்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link