நடிகர் சூர்யாவின் 45 ஆவது படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான கங்குவா வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. கங்குவை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா, தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். ’சூர்யா45’ படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். அண்மையில், கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் இப்படத்துக்கான பூஜை நடத்தப்பட்டு, அதே பகுதியில் படப்பிடிப்பும் தொடங்கியது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரப் பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஏ.ஆர்.ரகுமானும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக, பல நேர்காணலில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, படத்தின் ஒளிப்பதிவாளரை படக்குழு தற்பொழுது அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து விசாரித்ததில், ஏ.ஆர்.ரகுமான் தானே விலகியதாகவும், இன்னும் ஓரிரு நாளில் படக்குழு புதிய இசையமைப்பாளரை அறிவிக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
.