Last Updated:
அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ரஷ்யா, ஈரான் நாடுகள் தற்போது தங்களது படையை அனுப்பாததால் சிரிய படை பெரும் பின்னடைவை சந்தித்து வந்தது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் விமானம் திடீரென மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு, கடந்த வாரம் போரைத் தொடங்கியது. அந்த அமைப்பு தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் அலெப்போ உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த வண்ணம் இருந்தனர்.
அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ரஷ்யா, ஈரான் நாடுகள் தற்போது தங்களது படையை அனுப்பாததால் சிரிய படை பெரும் பின்னடைவை சந்தித்து வந்தது. இந்நிலையில், சிரிய தலைநகர் டமாஸ்கஸுக்குள் கிளர்ச்சியாளர்கள் குழு இன்று அதிகாலை நுழைந்தது. டமாஸ்கஸ் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய நிலைகளை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்டு ட்ரம்புக்கு ரூ. 2200 கோடி வரை செலவழித்த எலான் மஸ்க்!
தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாகவும், கொடுங்கோன்மை ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும் கிளர்ச்சியாளர் குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிகளை வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அவர் ரஷ்யா அல்லது ஜோர்டான் நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் அவர் பயணித்த விமானம் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிபர் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read: முற்றுகை முதல் சிலைகள் உடைப்பு வரை.. சிரியாவில் என்ன நடக்கிறது? – 10 பாயிண்டுகள்!
இந்நிலையில், கிளர்ச்சியாளர் குழுவிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்க அரசு தயாராக இருப்பதாக சிரிய பிரதமர் முகமது காஷி அல் ஜலாலி தெரிவித்துள்ளார்.
December 08, 2024 12:35 PM IST