Last Updated:
‘தருணம்’ திரைப்படத்தின் விமர்சனங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஊடக நண்பர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான ‘தருணம்’ படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதற்கான காரணத்தையும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “எங்கள் ‘தருணம்’ திரைப்படம் நேற்று (14.01.2025) பொங்கல் வெளியீடாக வந்ததை அறிந்திருப்பீர்கள்.
எங்கள் தரப்பில் சென்சார் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் படத்தினை வெளியிட இயலவில்லை. மேலும் தமிழகம் தாண்டியும், வெளிநாடுகளிலும் தனிக்கை செய்து இப்படத்தினை வெளியிடுவதற்கான அவகாசமும் கிடைக்கவில்லை.
இதுவரை படத்தினை பார்த்த ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்த நிலையில் இப்படம் மற்றொரு தேதியில் வெளியானால் இன்னும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியும் எனவும் அதன்மூலம் அதிக அளவிலான ரசிகர்களையும் கவர முடியும் என திரையரங்கு தரப்பிலிருந்தும் கருத்து தெரிவித்துள்ளனர். இதே கருத்தை பல தரப்பினரும் எங்களிடம் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்க: Game Changer | கேம் சேஞ்சர் படத்தில் எனக்கு திருப்தியில்லை – இயக்குநர் ஷங்கர்
இந்நிலையில் தற்போது ‘தருணம்’ திரைப்படத்தின் விமர்சனங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படியும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஊடக நண்பர்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே அனைவரின் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு ஆலோசனைக்கு பின் எங்கள் படத்தினை மற்றொரு தேதியில் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் கலந்தாலோசித்து வெளியீட்டு தேதியை கூடிய விரைவில் அறிவிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
January 15, 2025 3:05 PM IST