அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, அப்போதைய அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார். ஜோ பைடனின் ஆட்சி காலம் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
ஜோ பைடனின் உடல்நிலையால், அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டதால், போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார். இதையடுத்து, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
அதற்கு முன்பு வரை போட்டியில் ட்ரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், கமலாவின் வருகையால் நிலைமை தலைகீழாக மாறியது. இருவருக்கும் இடையேயான விவாதத்தில் கமலா ஹாரிஸ், இயல்பாக, படபடவென கூறிய பதில்கள் பலரையும் கவர்ந்தன. அமெரிக்காவின் பல்வேறு பிரபலங்களும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளிட்ட பல கோடீஸ்வர தொழிலதிபர்களும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளித்தனர்.
Also Read :
அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவி.!
இந்நிலையில், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, ட்ரம்ப்பின் கையும் ஓங்கியது. இதனிடையே, பரப்புரையின் போது அதிபர் வேட்பாளர் ட்ரம்ப்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரப்புரையில் தீவிரம் கட்டிய ட்ரம்ப், கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்ததுடன், இனவாதத்தையும் கையில் எடுத்தார்.
பணவீக்கத்தை விட எல்லை பாதுகாப்பே முக்கியமானது என முழங்கிய ட்ரம்ப், முதியோருக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். ட்ரம்ப்பின் பேச்சுகளுக்கு தனது பரப்புரையில் பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் ட்ரம்ப் சர்வாதிகாரி என்றும், மனித உரிமைகளையும், பெண் உரிமைகளையும் மதிக்காதவர் என்றும் சாடினார். மேலும், நடுத்தர மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் விலைவாசிகளை குறைப்பேன் என்றும், வரி சீர்திருத்தத்தைச் செய்வேன் எனவும் கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளித்துள்ளார்.
செவ்வாய்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க 18 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் நாளன்று பணி நிமித்தமாகவும், வேறு காரணங்களுக்காகவும் வாக்களிக்க முடியாதவர்களுக்காக, முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி இருப்பதால், அதைப் பயன்படுத்தி 4 கோடியே 70 லட்சம் பேர் ஏற்கனவே வாக்களித்துவிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில், கடும் போட்டி இருந்தாலும், ட்ரம்ப்பை விட கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், 290 ஆண்டு கால, அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக அமையும். அமெரிக்க அதிபராக வெள்ளை மாளிகையில் நுழையும் முதல் பெண் என்ற பெருமையையும், அதிபராகும் முதல் இந்திய வம்சாவழி என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெறுவார்.
.