தமிழ் சினிமாவில் எத்தனையோ அரசியல் படங்கள் வெளியாகி உள்ளன. அப்படியான படங்களில் அரசின் குறைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி சிந்திக்க வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அந்த வரிசையில் அரசு செய்யும் தவறுகளை நேரடியாக சர்ச்சை கூறிய வசனங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது “விடுதலை பாகம் 2” என்கின்றனர் தஞ்சை ரசிகர்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து ‘‘விடுதலை’’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். முக்கியமாக இந்த படத்தின் முதல் பாகம் வெளியான போது படத்தின் இசை மிகவும் அருமையாக அமைந்திருந்தது, பாடல்கள் மிகவும் பிரபலமானது. 2ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்தின் முடிவில் குமரேசனால் (சூரி) வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகியுள்ளது.
2ம் பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதற்கு பின்னால் என்ன நடந்தது? சிறையில் இருந்து எவ்வாறு தப்பித்தார்? போன்ற பிளாஷ்பேக் காட்சிகளை பிரதானமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் படம் பார்த்த தஞ்சை ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் “ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவன் தனது மக்களுக்கான உரிமைகளை கேட்க போராடுகிறான் ஆனால் அதிகாரம் அவனை ஒரு குற்றவாளியாகவும், விரோதியாகவும் சித்தரித்து அவனுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படமாக இருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அருமையாக இருக்கிறது. முதல் பாகத்தில் ஹீரோவாக சூரி இருப்பார். ஆனால் இரண்டாம் பாகத்தில் சூரிக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை.
முழுக்க முழுக்க விஜய் சேதுபதி தான் மாஸ் காட்டியிருக்கிறார். முக்கியமாக படத்தின் நகர்வு முதல் பாகத்தை விட வேகம் குறைவாக இருக்கிறது. ஃபுல் என்டர்டைன்மென்ட் மூவியாக இது இருக்காது. ஆனால் சமூகத்திற்கு தேவையான நல்ல ஆழமான கருத்தை பதிய வைக்கும் படமாக இருக்கிறது. இளையராஜாவின் இசை அற்புதம். நிறைய சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள் இருக்கிறது.”
“முதல் பாகத்தை பார்த்தால் மட்டுமே இரண்டாம் பாகம் புரியும். இரண்டாம் பாகத்தின் முதல் காட்சியை பார்த்தவர்கள் தான் இந்த படத்தை முழுமையாக புரியும். சர்ச்சைக்குரிய வசனங்கள் அடுத்தடுத்த காட்சிகளில் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.” என்றும் “சிலர் படம் ரொம்ப போர் அடிக்கிறது. நினைத்த மாதிரி இல்லை, ஓவர் கருத்து சொல்றாங்க” என படத்திற்கு கலவையான விமர்சனங்களை அளித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.