கடந்த 2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே வேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை தயாரித்தது.
படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளனர். ‘மதகஜராஜா’வை சுருக்கமாக ‘எம்.ஜி.ஆர்’ என்று அழைத்து வந்தனர். இப்போது வரும், அப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. அதன்படி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விஷால், சுந்தர்.சி, விஜய் ஆண்டனி ஆகியோர் படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மூவரும் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் படம் குறித்து பேசினார். வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் விஷால் பேசினார். அதில், “இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்” என்று பேசி கலகலப்பூட்டினார்.
அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, “முதன்முதலா பாட்டுப்பாடி வைரல் ஆனது நீங்கதான்… இன்னைக்குக்கூட வைரல் காய்ச்சலோடதான் வந்திருக்கீங்க.” என்று நடிகர் விஷால் காய்ச்சலுடன் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக விளக்கம் கொடுத்தார். எனினும், அவரின் தடுமாற்றம் மிகுந்த பேச்சு குறித்து வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“எனக்கு BEST ACTOR விருது கிடைக்கிதோ இல்லையோ BEST SINGER விருது கிடைக்கும்”#Vishal #MadhaGajaRaja #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/wF1YrTtLwK
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 5, 2025
ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், விஷால் விரைவாக உடல்நலம் தேறிவர வேண்டும் என்றும் அவர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, விஷாலால் நின்று பேச முடியவில்லை என்பதால் படக்குழு, மேசை வரவழைத்து அவரை உட்கார வைத்தது. பின்னர் படத்தில் பணியாற்றியது தொடர்பாக சுந்தர் சி, குஷ்பு மற்றும் விஜய் ஆண்டனியுடன் விஷால் பகிர்ந்துகொண்டார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 05, 2025 9:39 PM IST