Last Updated:
WPL Auction: மும்பை இந்தியன்ஸ் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி விக்கெட் கீப்பராகவும், ஓப்பனிங் பேட்டராகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டு சீசனுக்கான மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் ஏலத்தில், தமிழக வீராங்கனை கமாலினியை, 1 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் அடிப்படைத் தொகையான 10 லட்ச ரூபாயில் களம் கண்ட தமிழக வீராங்கனை கமாலினியை கைப்பற்ற டெல்லி கேபிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் 1 கோடியே 60 லட்ச ரூபாய்க்கு கமாலினியை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் தமிழக அணியில் சிறப்பாக விளையாடிய கமாலினி மொத்தம் 8 ஆட்டங்களில் 311 ரன்கள் குவித்தார். இவரின் சிக்ஸர் அடிக்கும் திறன் கிரிக்கெட் அணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இடது கை பேட்டரான கமாலினி U19 டி20 தொடரில் மட்டும் மொத்தமாக 10 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
மேலும், அடுத்த வாரம் தொடங்க உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் கமாலினி இடம் பிடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி விக்கெட் கீப்பராகவும், ஓப்பனிங் பேட்டராகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் கடந்த 2008ம் ஆண்டு பிறந்த கமாலினியின் தந்தை குணாளன் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தந்தையின் வழியை பின்பற்றி கமாலினியும் கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்தார். ஒரு கட்டத்தில், கிரிக்கெட் பயிற்சிக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தது கமாலினியின் குடும்பம். அதன்படி, சூப்பர் கிங்ஸ் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற கமாலினி தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.
Also Read | WPL 2025 ஏலம்: அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை.. யார் இந்த சிம்ரன் ஷேக்?
நேற்று நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் கமாலினி. முதலிடத்தில் சிம்ரன் ஷேக் ரூ.1.90 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் ஸ்டார் டியாண்ட்ரா டாட்டின் ரூ.1.70 கோடிக்கும் ஏலம் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான ஆல் ரவுண்டரான ஜோஷிதா, அடிப்படை விலையான 10 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 16, 2024 1:03 PM IST