தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு (2023) 256 திரைப்படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு இதுவரை மொத்தமாக 241 படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒப்பிட்டளவில் இந்த ஆண்டு வெளியான படங்கள் குறைவுதான். அதில் சில படங்கள் மட்டும் தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. ரூ.100 கோடி + பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘தி கோட்’, ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’, ‘கங்குவா’ படங்களில், ‘தி கோட்’ அதிகபட்ச வசூலையும், ‘வேட்டையன்’ ஓரளவுக்கு சுமாரான வசூலையும் பெற்றதாக கூறப்படுகிறது.
‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’, ‘லால் சலாம்’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’, ‘ரத்னம்’, ‘ராயன்’, ‘தங்கலான்’, ‘அமரன்’, ‘விடுதலை 2’ ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்குள்ளான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இதில் வசூல் வெற்றி என பார்த்தால், ‘ராயன்’, ‘அமரன்’. மற்ற படங்கள் வசூலித்தாலும், பட்ஜெட்டை தாண்டி வசூல் குவிக்கவில்லை என திரையுலகம் தரப்பில் கூறப்படுகிறது.
அதேபோல 50 கோடி பட்ஜெட்டுக்குள் உருவான ‘அரண்மனை 4’, ‘மகாராஜா’ மட்டும் பாக்ஸ் ஆஃபீஸில் முத்திரை பதித்தன. மற்றபடி, ‘சைரன்’, ‘அரண்மனை 4’, ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’, ‘பிரதர்’ வசூலில் பெரிய பட்ஜெட்டை கடந்து சோபிக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ரூ.30 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான படங்களில் ‘கருடன்’ நல்ல வரவேற்பை பெற்றதாகவும், ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா’, ‘மிஷன் சாப்டர் 1’, ‘மழை பிடிக்காத மனிதன்’ படங்கள் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரூ.20 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான படங்களில் லிஸ்ட் அதிகம். இதில், ‘டிமான்டி காலனி 2’, ‘வாழை’, ‘பிடி சார்’, ‘ஸ்டார்’ படங்கள் வசூலில் நம்பிக்கை கொடுத்ததாகவும், இவை தவிர்த்து வெளியான, ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘ரோமியோ’, ‘இங்க நான்தான் கிங்கு’, ‘அந்தகன்’, ‘ஹிட்லர்’, ‘கடைசி உலகப் போர்’, ‘வெப்பன்’, ‘ஜாலியோ ஜிம்கானா’, ‘பிளடி பெக்கர்’, ‘நிறங்கள் மூன்று’, ‘சொர்க்கவாசல்’, ‘மிஸ் யூ’ படங்கள் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Year ender 2024 | விஜய்யின் ‘தி கோட்’ முதல் அசால்ட்டாக ஸ்கோர் செய்த ‘மகாராஜா’ வரை – டாப் 10 பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் படங்கள்!
குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி லாபம் பார்த்த படங்களாக ‘லவ்வர்’, ‘ப்ளாக்’, ‘லப்பர் பந்து’ படங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் இந்தப் படங்கள் வெளியாகின. ரூ.3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான 141 திரைப்படங்களில் ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது.
December 31, 2024 11:39 AM IST